நவீன காலத்தோட பிடியில சிக்கி தவிக்கும் இப்போதைய நிலையில நம்முடைய பாரம்பரியத்த தொலைச்சிட்டு வந்துட்டு இருக்கோம்ணுதான் சொல்லணும். குறிப்பா சாப்பாட்டு விஷயத்துல, முழுசா  நம்ம ஆரோக்கியத்த கோட்டை விட்டோனும்தா சொல்லணும். அப்டி என்ன கோட்ட விட்டோம்னு கேக்குறீங்களா? இப்ப இருக்க கால சூழ்நிலையில ஒவ்வொருவருத்தவங்களோட ஆரோக்கியம் அப்படிங்கிறது பெரிய கேள்விக்குறியாக இருந்து வருது.




இன்னைக்கு இருக்கிற காலச்சூழலில் நாட்கள் வேகவேகமாக கடந்து போன நிலையிலும் பல்வேறு வேலைப்பளு காரணமா சமைக்கிறதுல ரொம்ப நவீனமா மாத்தி நான்ஸ்டிக் போன்ற டெக்னாலஜியால உருவாக்கப்பட்ட பொருட்களைத்தான் சமைப்பதற்கு அதிகமா பயன்படுத்துறோம். என்னடா சாப்பாட்டுக்கும் நான்ஸ்டிக் பொருட்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டுனு கேட்டீங்கன்னா, அதுக்கு பதில்தான் நம்முடைய பாரம்பரியம் மறந்துட்டோம் அப்படின்னு சொல்லலாம். நம்ம ஆச்சியோட மண் பானை குழம்பு ருசிய நம்ம 90ஸ் கிட்ஸுகள் மறந்து இருக்கவே முடியாது.  மண் பானைகள் சட்டிகள் நம்மளுடைய ஆரோக்கியத்த காப்பாத்துனதுன்னு எத்தனை பேருக்கு தெரியும்.


முதல்ல மண் பானையோடு ஸ்பெஷல் என்னன்னு தெரிஞ்சுக்கவும் அப்படி தெரிஞ்சுகிட்டீங்கன்னா, இனி எந்தப் பாத்திரத்துல நம்ம சமையல் பண்ணனும் அப்படிங்கறதை நீங்களே முடிவு செய்யலாம். நம்ம முன்னோர்கள் குறிப்பா பாட்டிமார்கள் எல்லாம் மண்பானையில சமைச்சு நமக்கு பரிமாறியத சாப்பிட்டவங்க அதை மறக்கவே முடியாது.அதுவும் குடும்பத்தோட கூட நாம சாப்பிட்டது நிச்சயம் இன்னைக்கு இருக்கும் நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும்னுதான் சொல்லமுடியும். இன்னும் கிராமப்புறங்கள்ள மண்பானையில மட்டுமே சமைச்சு வருவது நிறைய இருப்பதை பார்க்க முடியும்.




இப்போ இருக்க நவநாகரீக வாழ்க்க அப்படிங்கிற பேருல நகரங்கள்ள வாழும் மக்கள் ”நரக வாழ்க்கைய” வாழ்ந்து வர்றாங்கனுதா சொல்ல முடியும். காரணம் பசுமை மாறாத கிராமத்து வாழ்க்க நகரங்கள்ள நாம தொலச்சாச்சு. பிளாஸ்டிகோட தடையால இப்போ இருக்கிற மக்கள் பார்வை மீண்டும் பாரம்பரியத்த  நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறத பாக்க முடியுது. குறிப்பா இப்போ மஞ்சப்பை கொண்டு போய் காய்கறிகளை வாங்குவது, டீக்கடைக்கு தூக்குச்சட்டி எடுத்துச் செல்வது அப்டினு பல மாற்றங்கள் தற்போது மாறிருக்கு. அதேபோல பெண்களும் தங்கள் சமையலறையில 30 ஆண்டுகள் பின்னோக்கி போகணும் அப்படிங்கிற ஒரு ஆசையும் இருப்பதை பார்க்க முடியுது. என்ன அப்படின்னா பாரம்பரிய உணவு வகைகள சமைப்பதில இப்போ இருக்க பெண்கள் நிறைய ஆர்வம் காட்றதையும் பார்க்கமுடியும்.


குறிப்பா இப்போ இருக்க யூடியூப் சேனல்கள் எத்தனையோவீடியோ போட்டாலும் சாப்பாடு சம்பந்தமா வீடியோ  மாறாமல் மொத்த சத்துக்களும் நமக்கு கிடைக்கும் அப்படின்னு நம்முடைய மூதாட்டிகள் சொல்றதயும் கேக்க முடியுது.  மண்சட்டியில சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதுமானது.  


சுட்ட மண்ணால் செய்யப்படும் மண் பாத்திரங்கள் உடலுக்கு பல நன்மைகள் இருக்குனு சொல்றதையும் கேக்க முடியுது. உடல குளிர்ச்சியா வைக்கிறதுக்கு இந்த மண் பானை உதவுதாம். குறிப்பா மண்பாத்திரத்துல செய்யக்கூடிய எந்த உணவும் இப்ப இருக்குற குளிர்சாதன பெட்டியில வைக்க வேண்டிய அவசியமே இல்லையாம். இரண்டு நாளானாலும் மண்பானையில சமச்ச உணவு கெட்டுப்போகாம அப்படியே இருக்குமாம். காய்கறி சத்துக்களும் நமக்கு அப்படியே கிடைக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நாம வாழனும் அப்படின்னு மண்பாணை தயாரிப்பாளர்களும் சொல்வதை கேட்க முடியுது. இப்ப இருக்கிற சூழ்நிலையில நாம குடிக்கிற தண்ணி 100% சுத்தமானதா? அப்படின்னு கேட்டா இல்லன்னுதான் சொல்ல முடியும் ஏனா குடிநீரை சுத்திகரிக்க ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு வாட்டர் பில்டர்களை வீட்ல பயன்படுத்தி வர்றோம்.


ஒரு வழியா பிளாஸ்டிக் தடைய செஞ்சு வர்ற நிலையில பலரும் தற்போது வாழை பாக்கு மட்டை, தட்டுகள்  போன்ற இயற்கையான பொருட்கள பயன்படுத்த தொடங்கியிருக்காங்க. இந்த மாற்றம் நமக்கு சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். வீட்டிலும் முடிஞ்சவரை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாம மண் பாத்திரங்கள வாங்கி சமையல்  செஞ்சா இதன் மூலம் சிறு ,குறு தொழிலாளர்களும் பயனடைவாங்க. நம்மளோட பாரம்பரியமும்  உடல் நலமும் காக்கப்படும் அப்டிங்கிறதுல மாற்றுக்கருத்து இல்ல.