கொரோனா இரண்டாவது அலை தனது தீவிரம் சற்று குறைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் மீண்டும் கொரோனா அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று தொலைகாட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது " நாடு முழுவதும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இதற்கு ஏற்படும் செலவுகளை மத்திய அரசு ஏற்கும். இது வரை மாநில அரசுகள் வாங்கி வந்த 25% தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்" என பிரதமர் பேசினார்.



 

இதனை தொடந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வரவேற்று ட்வீட் செய்துள்ளார், என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மூன்றாவது அலைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.  மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மட்டும் 365 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,684-ஆக உயர்ந்தது. அதே போல் இன்று 1348 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 58025 அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரையில் இறப்பு எண்ணிக்கை 988-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 9671 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 



இந்நிலையில் கொரோனா நோய் தொற்று 3-வது அலை பரவ துவங்கினால், அது குழந்தைகளை அதிகளவிற்கு பாதிக்கும் நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மருந்துவமனையில், குழந்தைகளுக்குறிய சிகிச்சைக்கு பிரத்யேக வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை வழங்கி உடல்நிலை மாற்றங்களை கண்காணிக்கவும் "ஜீரோ டிலே வார்டு" CCC என்ற பெயரில் வார்டு துவங்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அறிகுறி இருக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக 11 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு பிரிவில் தற்போது 2 குழந்தைகள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

 



 

இரண்டாம் அலை கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சை பிரிவிலயே இன்று முதல் சிகிச்சை துவங்கியது. அதே போல் குழந்தைகளுக்கு தேவைப்படும் தீவிர சிகிச்சைப்பிரிவுகள், பல்ஸ் ஆக்சிமீட்டர், இன்குபேட்டர், வெப்பமானி, நெபுலைசர் போன்ற கருவிகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் என மருத்துவக் கட்டமைப்புகளை இப்போதிருந்தே வலுப்படுத்த வேண்டும் எனவும், குழந்தை மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் அதிகப்படுத்தி கிராமப்புற, வட்டார மருத்துவமனைககளிலும் குழந்தைகளுக்கான வார்டு பகுதிகளை உருவாக்கி மேம்படுத்தி தயார் நிலையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.