தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாக, ஆண்டுக்கு ஒருமுறை வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா ஏழு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த கோவில் திருவிழாவிற்கு வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு பல பெருமைகள் இருந்தாலும் இதனை மேலும் சிறப்பிக்கும் விதமாக வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவிலில் எடுத்த புகைப்படம் ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இடம்பெற வைத்துள்ளார் தேனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.


 



 


தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் வசித்து வருகிறார் புகைப்படக் கலைஞர் சிவமூர்த்தி. இவர் பள்ளிப்படிப்பை முடிக்கும் காலத்தில், தற்போது கர்ணன் படத்தின் ஒளிப்பதிவாளரான, தேனி ஈஸ்வரின் வீட்டின் அருகில் வசித்து வந்துள்ளார். ஒரு சிறிய வாய்ப்பு மூலம் திருமண நிகழ்ச்சிக்கு உதவியாளராக தேனி ஈஸ்வரிடம் பணிக்கு சேர்ந்துள்ளார். பின்னாளில் அவரிடம் பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு புகைப்பட தொழிலில் இறங்க ஆரம்பித்துள்ளார். அவரிடம் 1996ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். தேனி ஈஸ்வரனிடம் எதார்த்த புகைப்படங்களை எடுக்கும் நுட்பத்தை கற்று கொண்ட இவர் ஸ்ட்ரீட் போட்டோகிராபி எனப்படும் போட்டோகிராபியில் உள்ள ஒரு பிரிவில் அதிக கவனம் செலுத்த தொடங்கி, தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு நிகழ்வுகளை படமாக்கியுள்ளார்.


 



 


முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு மும்பை பெட்டர் போட்டோகிராபி நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்றது இவரின் அடுத்தடுத்த முயற்சிக்கு  தொடக்க படியாக இருந்தது எனலாம். அதற்கு பின்பு நாட்டில் எங்கு புகைப்படம் சம்பந்தமான போட்டி நடந்தாலும் பங்கேற்று அதிலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். ஒரு சமயத்தில் ஜெர்மனி நாட்டில் உள்ள பெரிலியம் அருங்காட்சியத்தில் இடம்பெற புகைப்படங்கள் தேர்வு செய்யப்படுவதை அறிந்த இவர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் எதார்த்தமாக  எடுத்த புகைப்படத்தை அனுப்பி உள்ளார். உலகில் பல புகைப்படக்கலைஞர் கலந்து கொண்ட இந்த போட்டியில் மொத்தம் மூன்று புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . அதில்  தேனியை சேர்ந்த சிவமூர்த்தியின் புகைப்படமும் ஒன்று.




தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோவிலில் எதார்த்தமாக எடுத்த புகைப்படம் உலக அளவில் பாராட்டை பெற்று ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது, தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என்று  பலரும்  இவரைப் பாராட்டி வருகின்றனர்.


 


தேனியில் கலவரம்... திடீர் பரபரப்பு... கடைசியில் தான் தெரிந்தது....!


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X