தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோவிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோவில் விளங்குகிறது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா ஆடி 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி கோவில் முன்பு ஊன்றப்பட்ட கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் நீல வர்ண கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, நேற்று ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேம் மற்றும் ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அவர்கள் சுரபி நதியில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி இறை வழிபாடு நடத்தினர். வருகிற 4-ந்தேதி திருக்கல்யாண நிகழச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்