'என் மண்  என் மக்கள்' - என்ற தலைப்பில் நடைபயணத்தை பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் துவக்கினார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா காவி கொடி அசைத்து துவைக்கி வைத்தார். 






முன்னதாக பிரமாண்ட மேடையில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி  ரவி பச்சமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பா.ஜ.க., நிர்வாகிகள் பேசிய பின் மத்திய அமைச்சர் அமித்ஷா தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். தொடர்ந்து நடைபயணத்தை துவக்கி வைத்து அண்ணாமலையுடன் சேர்ந்து நடைபயணத்தை உற்சாகமாக மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் ஆரவாரப்படுத்தினர். ஹிந்தி வாசகங்கள் நிறைந்த பதாதைகளை அண்ணாமலை ஆதரவாளர்கள் நடைபயணத்திற்குள் கொண்டுவந்தனர்.




இந்த நிகழ்ச்சிக்காக காலை முதலே தொண்டர்கள் வெளிமாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும்  வரத் துவங்கினர். காரங்காடு, தனுஷ்கோடி, ராமர் பாலம், அப்துல்கலாம் நினைவிடம், ராமநாத சுவாமி கோயில் என தொண்டர்கள் சுற்றுலா இடங்களை பார்வையிட்டு வந்தனர். தொண்டர்களுக்கு சில இடங்களில் சிறப்பான சைவ சாப்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. சில இடங்களில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநில பா.ஜ.க., தொண்டர்கள்  நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தினர். 





கூட்டம் நடைபெற்ற இடத்தில் அமித்ஷா பேசிக் கொண்டிருந்த போது கடைசியில் சேர்கள் காலியாக கிடந்ததை போட்டோ எடுத்த தனியார் செய்தி புகைப்பட கலைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்று காலையில் அமித்ஷாவுடன், அண்ணாமலை ராமநாத சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மீனவர் வீடுகளுக்கு சென்ற அண்ணாமலை குடும்பத்தினருடன் மோடி ஆட்சி குறித்து விளக்கி பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று பார்வையிட்ட பின்னர் ஊர் திரும்புகிறார். அண்ணாமலையை மலை போல் நம்பும் அமித்ஷா சில குறிப்புகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் நடைபயணத்தில் இதையெல்லாம் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்ய வேண்டாம் எனவும் இதையெல்லாம் ஹைலைட்டாக எடுத்துச் செல்லுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளதாக அண்ணாமலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை என தனது நடைபயணத்தை தொடர உள்ளார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.