மதுரை மாவட்டம் கீழக்கரை ஏறுதழுவல் அரங்கத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சிறந்த காளைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த காளை உரிமையாளர் ஒருவருக்கு முதல் பரிசு கார் மற்றும் ஒரு லட்சம் காசோலை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2ஆம் பரிசாக திருச்சியை சேர்ந்த காளை உரிமையாளருக்கு பைக் பரிசும் 75ஆயிரம் காசோலையும், மூன்றாவது பரிசாக மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஜெட்லி என்ற காளையின் உரிமையாளருக்கும் 50ஆயிரம் காசோலை பரிசாக வழங்கப்பட்டது.

 




இந்நிலையில் பரிசு அறிவிப்பின் போதே சிறந்த காளைகளுக்கான பரிசு அறிவிப்பில் முறைகேடு உள்ளதாகவும், மூன்று இடங்களை பிடித்த காளைகளின் வீடியோக்களை ஒளிபரப்ப வேண்டும் என 3ஆவது பரிசுபெற்ற காளையின் உரிமையாளர் மேடையிலேயே சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்.  இந்த விவகாரம்  சர்ச்சையான நிலையில் இன்று கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 3ஆம் இடம் பிடித்த காளையின் உரிமையாளர் முடக்காத்தான் மணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி தேர்வுக்குழுவினை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் திருநங்கைகளை வைத்து ஒப்பாரி வைத்தும், பொய்க்கால் காளையுடன் வந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

 



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்க குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்து பரிசு முறைகேடு குறித்து முறையிட்ட பின்னர் கோரிக்கை மனுவை அளித்தனர்.  மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக அரசு சார்பில் நடத்தப்பட்டு முதலமைச்சர் தொடங்கிவைத்த நிலையில் அதேபோட்டியில் பரிசு அறிவிப்பில் அமைச்சர் பெயரை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளதாக காளை உரிமையாளர் குற்றம்சாட்டி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



இது தொடர்பாக பேசிய காளை உரிமையாளர் முடக்காத்தான் மணி...,"கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியின்போது அமைச்சர் மகேஷ் பெயரில் அவிழ்க்கப்பட்டதால் நன்கு விளையாடாத காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும், எங்களது காளை சிறப்பாக விளையாடிய நிலையில் 3ஆம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளது. சிறப்பாக களமாடிய காளைகளின் வீடியோக்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இதுபோன்ற சர்ச்சை எழுந்த நிலையில் ஏன்  பரிசு பெற்ற காளைகளின் விளையாட்டுகளை ஒளிபரப்பு செய்திருக்கலாம் எனவும்,  எங்களுக்கு பரிசு முக்கியம் இல்லை, சிபாரிசு என்ற பெயரில். காளை உரிமையாளர்களை கலங்கப்படுத்தவதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து உரிய பரிசீலனை செய்யாதபட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.