மதுரை மஹபூப்பாளையம் அன்சாரிநகர் தெருவில் முகமது அலி என்பவர் வசித்துவருகிறார். திருமணமான நிலையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இருந்துவருகிறார். அதே பகுதியில் உணவகம்  ஒன்றை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் கடையை மேம்படுத்துவதற்காக தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக செல்வக்குமார் என்பவரிடம் இருந்து மூன்று லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக உணவகம் மூடப்பட்டதால் போதிய வருமானம் இல்லாமல் தவித்தார்.



 

 

 கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையில் கடன் தொல்லை அதிகரித்து வந்துள்ளது. தொடர்ச்சியாக இவரிடம் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முகமது அலி தன்னை குறிப்பிட்ட சிலர் தொல்லை செய்வதாக கூறி,  நேற்றிரவு தற்கொலை வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு இராசாசி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  தற்கொலைக்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோவில் " வழக்கறிஞர் செல்வக் குமார் என்பவரிடம் 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 6 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்கிறார். வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாக பேசுகிறார். பத்திரம், செக் லீப் வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள். என்னுடைய இந்த சாவிற்கு வழக்கறிஞர் செல்வக்குமார் உட்பட 4 பேர் தான் காரணம்" மேலும் ’பிள்ளைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என அவரின் தந்தையிடம் வேண்டுகோள்விடுத்தார். ’உலகத்தில் வாழ பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நண்பர்கள் பலமுறை அறிவுரை கூறியும் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதாகவும். நண்பர்கள் சரவணன் சக்தி இருவரும் தன்னை மன்னித்து விடுங்கள்’ என்றும்.

 



 

மேலும் ’ஏற்கனவே கடந்த ஆண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களே என்னுடைய குடும்பத்தின் குறைகளையும் தீர்த்து வையுங்கள். என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் முதல்வரே.., என கண்ணீர் மல்க எட்டு நிமிட வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் தவித்துவருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 



 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள்..,” வட்டிதொகையை  கேட்டு  செல்வக்குமார் அவரது கூட்டாளிகள் ஜெய்சிங், மாரிமுத்து உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தொல்லை தந்துள்ளனர்.  தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகமது அலி உயிரிழப்பிற்கு பின் அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கு தொல்லை ஏற்படாத வகையில் காவல்துறையினர் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றனர்.


 




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050