கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 77.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்கிறது ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீடு. இந்தக் குறியீடு வெளியாகி ஒருமாதம் கூட முழுமையாகவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள தொகையை இந்திய ரூபாய்க்கு கணக்கிட்டால் சுமார் 5.66 லட்சம் கோடி ரூபாய். பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியான அவர் கடந்த 24 மணி நேரமாக சென்ஷேனல் டாப்பிக்காகியிருக்கிறார். 


காரணம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி. நேற்று பங்குச்சந்தை முடியும்போது அதானி குழுமத்தின் பங்குகள் மிகமிக மோசமான சரிவை சந்தித்திருந்தன. அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 5 நிறுவனங்களின் பங்குகள் மோசமான சரிவை சந்தித்ததால், ஒரு மணி நேரத்திலேயே ரூ.73,000 கோடி இழக்க நேரிட்டது. சமூகவலைதளங்களில் #AdaniGroup #Adani #Nifty போன்ற ஹேஷ்டேகுகளும், மீம்ஸ்களும் களைகட்டி வருகின்றன.


Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!


சரி, யார் இந்த அதானி?


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1962ல் ஒரு ஜெயின் குடும்பத்தில் பிறந்தவர் கவுதம் அதானி. 7 பேருடன் பிறந்த கவுதம் அதானியின் தந்தை குஜராத்தில் ஜவுளி வியாபாரி. வியாபாரப் பின்னணி கொண்ட குடும்பம் என்பதாலோ என்னவோ அதானி கல்லூரியில் வணிகவியல் துறையையே தேர்வு செய்தார். ஆனால், இரண்டாம் ஆண்டுடன் படிப்பைத் துறந்தார். ஆனால், இன்று ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.


குஜராத் டூ மும்பை..


கல்லூரிப் படிப்பை இரண்டாம் ஆண்டோடு நிறுத்திய அவர், மும்பைக்கு வியாபார எண்ணத்தோடு சென்றார். ஆனால், அவருடைய தந்தையைப் போல் அவருக்கு ஜவுளி வியாபாரத்தில் நாட்டமில்லை. அவரது கவனம் வைர வியாபாரமாக இருந்தது. மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியவர். இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே வைர வியாபார தரகரானார். அதில் பெரிய முன்னேற்றம் வராத நிலையில், 1981ல் தனது சகோதரரின் தொழிலைக் கவனித்துக் கொள்வதற்காக அகமதாபாத்துக்கே மீண்டும் சென்றார். அப்போதுதான் அவருக்கு பாலிவினைல் குளோரைடு தொழில் அறிமுகமானது.




பின்னர், தனக்கென சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான் அதானி என்டர்பிரைசஸ்.  குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தொழிலதிபர் அதானியின் அசுர வளர்ச்சி தொடங்கியது. குஜராத் கட்ச் வளைகுடாவில் முந்த்ரா பகுதியில் துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது மோடி அரசு. ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது. 


1994-ல் இந்திய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைஸ் நிறுவனத்தை பட்டியலிடப்பட்டது. 1995-ல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை வென்றார். அதானி குழுமம் விமான நிலையங்கள் பராமரிப்பிலும் இறங்கியது. அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களின் விமான நிலையங்கள் தனியார் பராமரிப்புக்காக ஏலத்தில் விடப்பட்டன. அதானி குழுமங்கள் ஐந்து விமானநிலையங்களின் பராமரிப்பு ஏலத்தை எடுத்தது.
2000-ல் சிங்கப்பூரின் வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யத் தொடங்கினார். 2001-ல் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கினார்.


இன்றளவும் அவரின் பெரிய அடையாளமாக இருப்பது அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Adani Ports and SEZs) தான். இப்படியாக தனக்கென தனியொரு சாம்ராஜ்யம் அமைத்துள்ளார் கவுதம் அதானி.


Flipkart-இல் 3 நாட்களுக்கு அதிரடி தள்ளுபடி : ஈஸி பட்ஜெட்டில் வரவிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்!