கேரளாவில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க கேரள அரசு மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராமங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து தீவிர சுகாதார நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கேரள எல்லைப்பகுதியாக உள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Iphone 15 Series: அடடே இது வேறையா? புது ஆப்பிள் ஐபோனில் இஸ்ரோவின் தொழில்நுட்பம்: என்ன ஸ்பெஷல் தெரியுமா?




அதன்படி, தேனி மாவட்டத்தில் கேரள எல்லைகளாக உள்ள குமுளி, போடிமெட்டு, கம்பமெட்டு பகுதிகளில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறையினர் கண்காணிக்க மாவட்ட  ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து கம்பம்மெட்டு மலைப்பாதையில், 18-ம் கால்வாய் பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சிராஜூதீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளி, தினேஷ், கம்பம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முகாமிட்டுள்ளனர்.இந்த குழுவினர், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகனத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என டிஜிட்டல் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூச்சுவிடுவதில் சிரமம், வைரஸ் காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் உள்ளதா? என்பது குறித்தும் கேட்கின்றனர்.


Minister Sekarbabu: “உப்பு சப்பு இல்லாத சனாதனம்; அண்ணாமலை தூக்கி பிடிக்க காரணம் இதுதான்” - சேகர் பாபு தாக்கு



இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர் . இதேபோல் போடிமெட்டு, குமுளி உள்ளிட்ட எல்லை பகுதியிலும் சுகாதாரத்துறை, போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. எனவே பழங்களை வெந்நீரால் கழுவி சாப்பிட வேண்டும். வெடித்த பழங்கள், கடித்த பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களிடம் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கடுமையான தலைவலி, காய்ச்சல், சோர்வு, சுவாச பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றனர்.


இங்கு உடல் உறுப்புகள் விற்பனை... பிரபல மருத்துவமனை பெயரில் போலி இணையதளம் - நைஜீரியா வாலிபர் கைது