பிரபல மருத்துவமனை பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி உடல் உறுப்புக்களை விற்று தருவதாக மோசடி செய்த நைஜீரியா வாலிபர் உள்பட 5 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சென்னை பிரபல மருத்துவமனை இணைதளத்தை போன்று போலியான இணையதளத்தை உருவாக்கி அதில் உடல் உறுப்புகள் விற்று தருவதாக போலி விளம்பரங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் புகார் செய்யப்பட்டது.  சென்னை தெற்கு மாண்டல போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் சென்னை தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட போலீசார் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணையில் பெங்களுருவில் இருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தெற்கு மண்டலம் சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பெங்களூரூ சென்று பனஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்து மோசடி கும்பலை தேடினார்கள்.


 

அப்போது மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜெர்மியா (50), உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிவியா (25) ஆகியோரை கைது செய்தனர்.  இதில் உடல் உறுப்புகள் குறித்து பேசிய பணத்தை பெறவும் வங்கி கணக்குகளை தந்து உதவியாக மனிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மோனிகா (59), இரோம் ஜேம்சன் சிங் (21), திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ராம் பகதூர் ரியாங் (31) ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

 

நைஜீரிய மற்றும் உகாண்டா நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்த 2 பேரும் நுரையீரல், சிறுநீரகம் மாற்றுக்கு உறுப்புகள் தானத்திற்கு ரூ. 5 கோடி தருவதாகவும் கருப்பு தாளை டாலராக மாற்றி தரும் ராசாயண விற்பனை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு திருமண வரன் பார்ப்பதாகவும் ஆபாச வீடியோ அழைப்பு  போன்ற பல மோசடிகள் செய்து பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட சொல்லி பின்னர் ஏமாற்றுவது என  தெரியவந்தது. 

 

இதற்காக இந்திய மக்களின் வங்கி கணக்குகளையும் சிம்கார்டுகளை உபயோகித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பொதுமக்களிடம் எப்படி பேசுவது என்ற நோட்ஸ் தயார் செய்து வைத்து கொண்டு பொதுமக்கள் அளிக்கும் அல்லது கேட்கும் கேள்வி தொடர்பாக பதிலளிக்கும் விதத்தில் உரை தயார் செய்து வைத்து இருந்ததும் தெரியவந்தது. ஒவ்வொரு குற்றத்திற்கும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விரிவான விவரங்கள் தெரிந்துக்கொண்டு வைத்துக்கொண்டு இக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து  போன்கள், வங்கி கணக்கு அட்டைகள். மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும் இது போல் எத்தனை நபர்களிடம் மோசடி செய்து உள்ளார்கள். இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.