சிப்பிப் பாறை வகை நாட்டு இன நாய்களுக்கான போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சோபிகா என்ற 7 வயது சிறுமி வளர்த்த சிப்பிப்பாறை நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.


 


மதுரை தமுக்கம் மைதானத்தில்  தேசிய அளவிலான 37- வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 55 வகைகளை சார்ந்த 355 நாய்கள் கலந்துகொண்டன.

 





 

இதில் டூடுல், ஜெயின் பெர்னாட், ஆப்கான் ஹண்ட், ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன், கிரேடேன், ராட் மாஸ்டிஸ், பாக்சர், ஜிவாவா, மால்டிஸ், சைபீரியன் அஸ்கி, ஸ்பேனியல் உள்ளிட்ட 55 வகையாக வெளிநாட்டு இன நாய்களும், ராமநாதபுரம் மந்தை, ராஜபாளையம், சிப்பிப் பாறை, கண்ணி, கோம்பை உள்ளிட்ட 10 நாட்டு வகை இனநாய்களும் கலந்து கொண்டன. நாட்டு இன நாய்கள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக நாட்டு இன நாய்களுக்கான சிறப்பு அரங்கில் கண்காட்சி நடத்தப்பட்டது. 



 

 

இதில் ஆஸ்திரேலிய, ஜப்பான் நாடுகளை சேர்ந்த நடுவர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட நாய்களின் அடிப்படைத் தகுதியான உடல் கட்டமைப்பு , கட்டளைக்குக் கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் , நாய்களின் உடல் தகுதி, வயதுக்கேற்ப வளர்ச்சி, நிறம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

 

ஒவ்வொரு வகையான சிறந்த நாய்களுக்கு பரிசுக் கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் சிப்பிப் பாறை வகை நாட்டு இன நாய்களுக்கான போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சோபிகா என்ற 7 வயதுச் சிறுமி வளர்த்த சிப்பிப்பாறை நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் நாட்டின நாய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இந்த கண்காட்சியில் பங்கேற்ற சிறந்த நாட்டு நாய்களுக்கு தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன.



 

இதில் பார்வையாளராக கலந்துகொண்ட மதுரையைச் சேர்ந்த ரமணி என்பவர் கூறுகையில், ”உள் அரங்கில் நடைபெற்ற நாய்க் கண்காட்சியாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. இதில் ஏராளமான வித்தியாசமான நாய்களை பார்த்தோம். இதில் குட்டை ரக நாய்கள் குழந்தைகளை கவரும் வகையில் இருந்தன. அதே போல் சில நாய்கள் அதிகளவு நீளமான முடியுடன் இருந்ததும் அழகாக இருந்தது’’ என தெரிவித்தார்.