உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தை இன்று ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து  வைக்கவுள்ள நிலையில் இந்த பாலத்தின் சிறப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

செனாப் பாலம்:

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலம், இது கத்ரா வழியாக புது டெல்லிக்கும் காஷ்மீருக்கும் இடையே நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தி தர உள்ளது.  272 கீ.மி நீளம் கொண்ட உதம்பூர்-பாரமுல்லா ரயில் பாதையில் 118 கி.மீ கொண்ட காசிகுண்ட்-பாரமுல்லா பகுதி அக்டோபர் 2009 -ல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

அதே போல் இரண்டாம் கட்டமாக 18கி.மீ நீளம் கொண்ட காசிகுண்ட் மற்றும் பனிஹால் பாதை ஜூன் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, 2014 ஆம் ஆண்டு ஜூலையில் 25 கிமீ நீளமுள்ள உதம்பூர் கட்ரா பாதையும் பயன்ப்பாட்டுக்கு வந்தது. பனிஹால்-காசிகுண்ட் வரையிலான 48.1கிமீ நீளமுள்ள பாதை கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

மீதமுள்ள 63 கி.மீ நீளமுள்ள கத்ரா-சங்கல்தான் பிரிவு ஜூன் 6 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வர உள்ளது, இதை பிரதமர் மோடி நாளை திறக்கவுள்ளார். 

செனாப் பாலத்தின் மதிப்பீடு:

சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவு பாலமாகும், இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமும் கொண்டது.

சிறப்புகள்:

  • பொறியியல் அற்புதமான செனாப் பாலம், பாரமுல்லாவை ஜம்முவுடன் உதம்பூர்-கத்ரா-காசிகுண்ட் பாதை வழியாக இணைக்கிறது. இந்த பாதையின் பயண நேரம் சுமார் ஆறரை மணி நேரமாகும். 
  • இந்த பாலமானது மணிக்கு 250 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசினாலும் அதை  தாங்கும் திறன் கொண்டது.
  • ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இந்த பாலமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதன் கட்டுமானத்தில் சுமார் 30,000 மெட்ரிக் டன் ஸ்டீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் திட்டத்தின்(USBRL) நீளம் சுமார் 272 கிலோமீட்டர்கள். இந்த 272 கி.மீ.களில், கிட்டத்தட்ட 36 சுரங்கப்பாதைகள் கிட்டத்தட்ட 119 கி.மீ நீளத்துடன் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் சுமார் 1,000 பாலங்கள் உள்ளன.
  • அதிவேகக் காற்று, தீவிர வெப்பநிலை, நில அதிர்வு  மற்றும் நீர்நிலை சவால்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு மற்றும் ஆயுள் சோதனைகளிலும் இந்தப் பாலம் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.
  • இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன, ஆனால் 2008-09 ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் அதிக வேகத்தில் காற்று வீசியதால் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக நிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 2024 இல் நிறைவடைந்தது.
  • இந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, இந்திய ரயில்வே, செனாப் பாலத்தில் எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது, இதன் மூலம் காஷ்மீரில் உள்ள ரியாசியிலிருந்து பாரமுல்லா வரையிலான பாதையில் ரயில் சேவைகள் தொடங்க வழி வகுத்தது.