உலக சுற்றுச்சூழல் தினம் விஜய் போட்ட உத்தரவு சாலையில் மரக்கன்றுடன் கூடிய த.வெ.க தொண்டர்கள்
உலக சுற்றுச்சூழல் தினம்
நாம் வாழ்கின்ற புவியும் அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல அபூர்வமானதும் கூட. இந்த பூமிப்பந்து, பல்வேறு வகையான நீர்- நிலவளங்கள், மலைகள், மண்வளங்கள் போன்ற இயற்கை காரணிகளாலும், சிறு செடி முதல் படர்ந்த பசுமைக் காடுகள், பூச்சிகள், மீன்கள், பலவகைப்பட்ட விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற உயிருள்ள காரணிகளாலும் இணைந்து பல்வேறு சூழ்நிலை மண்டலங்களாக உருவாகி உள்ளது. பூமியையும், அதன் மீதுள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றத் தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'உலக சுற்றுச்சூழல் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் த.வெ.க., தொண்டர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர்.
த.வெ.க., சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மரக்கன்றுகள் வழங்க வேண்டும். என்று, அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்த அடிப்படையில். மதுரை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணியின் சார்பாக, ஐந்து இடங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
மரக்கன்றுகளை வழங்கிய த.வெ.க., நிர்வாகிகள்
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடமும், பேருந்து பயணிகளிடம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். மக்களும் மிக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர். கொய்யா, மா, பழா, சீதாப்பழக் கன்று, நெல்லிக்காய், செம்பருத்தி, மாதுளை, மருதாணி, ரோஜாப் பூ, இட்லி பூ, போன்ற கன்றுகளும், மூலிகை செடிகளும் என பல விதமான மரக்கன்றுகளை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வழங்கினார்கள்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் கட்டமைப்பின் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு இடர்பாடு ஏற்படுமானால், அங்குள்ள சுற்றுச்சூழல் வாழ்விடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, மரங்களும், காடுகளும் அழிக்கப்பட்டால் மழைவளம் குறைகிறது. மழை இல்லையென்றால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் குறைபாட்டால் உயிரினங்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் சுற்றுச்சூழலும் அதன்தொடர் நிகழ்வுகளும் அமைகின்றன என்பதை விளக்கும் வகையில் தவெக தொண்டர்கள் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.