தேனி மாவட்டத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 கல்வி ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.




பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கி மீண்டும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தேர்ச்சி பெற்ற போதிலும் மாணவ-மாணவிகள் பலர் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ-மாணவிகளை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஈடுபட்டனர். இதில் கடந்த காலங்களை விட அதிக அளவில் மாணவ-மாணவிகள் இடைநிறுத்தம் ஏற்பட்டதாக தெரியவந்தது.




அவ்வாறு இடைநின்ற மாணவ-மாணவிகள் இருப்பிடங்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர்கள் தேடிச் சென்று அவர்களின் கல்வியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு மேல்படிப்பு படிக்காமல் இருந்த மாணவ-மாணவிகளும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விருப்பத்தின் பேரில் பிளஸ்-1 மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




ஆட்சியர்களின் நேரடி உதவியாளர் பணியிடங்களை குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பக் கோரிய வழக்கு தள்ளுபடி


வட்டாரம் வாரியாக, ஆண்டிப்பட்டியில் 248 பேர், போடியில் 253 பேர், சின்னமனூரில் 172 பேர், கம்பத்தில் 375 பேர், கடமலை-மயிலையில் 71 பேர், பெரியகுளத்தில் 273 பேர், தேனியில் 433 பேர், உத்தமபாளையத்தில் 304 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்