புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு, துணை ஆட்சியர், டிஎஸ்பி  உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முதல் மாவட்ட மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் (சட்டம் பிரிவு) என்ற பணியிடம் துணை ஆட்சியர் நிலையில் அரசாணை மூலம் உருவாக்கப்பட்டது. 

 

துணை ஆட்சியர் நிலையிலான இந்த பணியிடம் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த பணியிடத்தை நிரப்ப, தொடக்கத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக குரூப்-1 தேர்வில் இந்த பணியிடம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த பணியிடத்துக்கு BL சட்டம் முடித்த வழக்கறிஞர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.   

 

ஆனால் இந்த பணியிடம் நிரப்பப்படாமல், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வழக்குகள் தேக்கமாகி உள்ளன. எனவே மாவட்ட ஆட்சியருக்கு நேரடி உதவியாளர் (சட்டம்  பிரிவு)  பணியிடத்திற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வு மூலம் அறிவிப்பு வெளியிட்டு  நிரப்ப உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய்,  கிருஷ்ணன் ராமசாமி அமர்வு," இது ஒரு சிறந்த கோரிக்கையைக் கொண்ட வழக்கு.   ஆனால் பொதுநல வழக்காக தொடர முடியாது என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 








பரவை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

 

மதுரை மாவட்டம் ஊர்மச்சி குளத்தைச் சேர்ந்த கலாமீனா, வின்சி உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  "மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி உள்ள 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19 இல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் 8 பேரும், திமுக சார்பில் 6 பேரும் சுயேட்சை ஒருவரும் என 15 பேர் தேர்வு செய்யப்பட்டோம். இதன் மூலம் பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

இந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுகவைச் சேர்ந்தவர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக தேர்வு செய்ய ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு ஆதரிக்க வேண்டும் எனக்கோரி எங்களை ஆளும் கட்சியினர் மிரட்டி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கை குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. எனவே எங்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்கவும். யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே அதிமுகவினரை மிரட்டி அவர்களுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு தொந்தரவு செய்து வருகின்றனர்" என கூறினார். இதையடுத்து நீதிபதி மனுதாரர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க  உத்தரவிட்டுள்ளார்.