மதுரை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் எஸ்.பி சிவ பிரசாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்..., " மதுரை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக  புகையிலை குட்கா விற்பனை செய்ததாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படும். தற்போது வரை 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






 

குட்கா விற்பனை செய்த 45 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எச்சரிக்கப்பட்டு விற்பனை தடுத்து நிறுத்தப்படும். குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய விற்பனையாளர்களை பிடிக்கும் போது, அவர்களுக்கு மொத்தமாக போதை பொருட்கள் வழங்கும் நபர்களை பிடிக்க ஏற்பாடு செய்யப்படும்.



கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து விழிப்புணர்வுகளும் அளிக்கப்படும். அதற்கான திட்டமிடலும் உள்ளது. கிராமப்புறங்களில் சிறார் குற்றங்களை தடுக்கும் வகையில் பாய்ஸ் கிளப் மூலம் காவல்துறையை பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருந்து கடைகளில் அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்படும். மணல் மற்றும் கற்கள் கடத்தல் தொடர்பான குற்றங்கள் தடுக்கவும் ஏற்பாடும் செய்யப்படும்" என்றார்.

 

வழக்கறிஞர் ப.ஸ்டாலின் நம்மிடம் பேசுகையில்..,” மதுரையில் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை புதிய எஸ்.பி சரி செய்ய வேண்டும். மணல் மற்றும் கற்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பணியாற்றும் உளவுத்துறையினர்களை மாற்ற வேண்டும். இது போற்ற விசங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.