கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை பீ.பிகுளம் பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது. இதனை பார்த்த இளைஞர் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார்.  இதனையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம் நடைபெற்றுள்ளது. நாய்கள் கடித்து சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள பொன்னுச்சாமி தியேட்டர் எதிரே ரத்த கரையுடன் கிடந்த துணியை நாய்கள்  கடித்து தின்று கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்., விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நாய்களிடமிருந்து ரத்தக் கரையுடன் கிடந்த துணியை எடுத்து பார்த்தபோது துணியில் பிறந்து சில மணிநேரமே ஆன சிசுவை நாய்கள் கடித்து சிதைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.





 

சிதைந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சிசுவை சாலையோரம் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் ஆண் சிசுவா, பெண் சிசு வா என கண்டறிய முடியாத சூழலில் இந்த சிசு இப்பகுதியில் உள்ள பெண்ணிற்கு பிறந்ததா? அல்லது வேறு எங்காவது பிறந்த சிசுவை இங்கு தூக்கி வீசிவிட்டு சென்றனரா எனவும், சிசு கிடந்த பகுதியில் சி.சி.டி.வி., காட்சிகள் ஏதும் உள்ளனவா எனவும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உசிலம்பட்டியில் பிறந்து சில மணிநேரமே ஆன சிசு சாலையோரம் வீசப்பட்டதும், அதை நாய்கள் கடித்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.