உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் பதினெட்டாம்படி கருப்புசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை அள்ளிச் சென்று உற்சாகமடைந்தனர்.






மதுரை மாவட்டம்  விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கம்பகாமாட்சி பதினெட்டாம்படி கருப்புசாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் அருகே உள்ள கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களின் நேர்த்திக் கடனுக்காக கண்மாயில் மீன்களை வாங்கி விடுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. 




இந்த ஆண்டு முதலைக்குளம் கம்பகாமாட்சி பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு முதல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு மூன்று முறை வெடி வெடித்து மீன்பிடி திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.




அதனைத் தொடர்ந்து  உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கருமாத்தூர், சோழவந்தான் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி கட்லா,ரோகு,விரால், சிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். 




இந்த கண்மாயில் பிடிக்கப்படும் மீன்களை விற்கக் கூடாது என்பது ஒரு ஐதீகமாக உள்ளதாகவும், கிராமங்களின் ஒற்றுமைக்காகவும் இப்படி ஒரு திருவிழா நடப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


இது குறித்து உசிலம்பட்டியை சேர்ந்த கணேஷன் நம்மிடம்...,” பொதுவாக மதுரை மாவட்டத்தில் அதிகளவு மீன்பிடி திருவிழா நடைபெறும். இந்நிலையில் முதலைக்குளம்  கம்பகாமாட்சி, பதினெட்டாம்படி கருப்புசாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் அருகே உள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான நபர்கள் கலந்துகொண்டனர். என் நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். கடையில் மீன் வாங்கி சாப்பிட்டாலும் மீன்பிடி திருவிழாவில் கிடைக்கும் மீன்களின் ருசி தனிதான்” என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண