ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என சாதி ரீதியாக அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சை ஆகியுள்ளது.
அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 2023 - 24 மற்றும் 2024 - 2025 அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் நிகழ்ச்சியில் சாதி ரீதியாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டபரம்பரை அமைச்சர் பேச்சு
நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது...,” ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும் பொழுது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது” என்று பேசியுள்ளார்.
பாராட்டும் சர்ச்சையும்
”அமைச்சர் பி.மூர்த்தி கோவக்காரர், ஆனால் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்” என அமைச்சர் பதவி வழங்கியதற்கு பின்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார். அதே போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “ மூர்த்தி அவர்கள் பிரமாண்டத்தை ஏற்படுத்துவார், அவர் தான் எனக்கு மதுரையில் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கொடுக்கிறார்” - என்றெல்லாம் பெருமை பட பேசியுள்ளனர். இப்படி குட் லிஸ்டில் இருக்கும் அமைச்சர் மூர்த்தி ஆண்ட பரம்பரை பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் மூர்த்தி..”சமத்துவம், சமூக, பெரியாரின் வாரிசு, அண்ணாவின் வாரிசு என்றெல்லாம் பேசிவிட்டு தற்போது ஆண்ட பெருமை பேசிய, பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தபடியாக செய்தியாளர்கள் கேள்விக்கு என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
மேலும் செய்திகள் படிக்க - Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்