Bhopal Gas Tragedy:  நச்சுக் கழிவுகள் 250 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமை வழிச்சாலையில் ஆம்புலன்ஸ்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினருடன் கொண்டு செல்லப்படுகின்றன.


போபால் நச்சுக் கழிவுகள் அகற்றம்


போபாலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு யூனியன் கார்பைட் பேரழிவின் அபாயகரமான கழிவுகள், 12 கண்டெய்னர்களில் பலத்த பாதுகாப்புடன் போபாலில் இருந்து பிதாம்பூருக்கு கொண்டும் செல்லும் பணி தொடங்கியுள்ளது. நச்சுக் கழிவுகள் 250 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமை வழிச்சாலையில் ஆம்புலன்ஸ்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் சூழ கொண்டு செல்லப்படுகின்றன. போபாலில் இருந்து ஐம்பது போலீசார் கண்டெய்னர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களுடன், கழிவுகள் கொண்டு செல்லப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நச்சுக் கழிவு விவரங்கள்:


போபாலில் கைவிடப்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டன.  இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 12 கசிவு எதிர்ப்பு மற்றும் தீ தடுப்பு கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு கண்டெய்னரும் தோராயமாக 30 டன் கழிவுகளை எடுத்துச் செல்கிறது. ரசாயன எதிர்வினைகளைத் தடுக்க கழிவுகள் ஜம்போ HDPE பைகளில் அடைக்கப்படுகிறது. இதனிடையே தொழிற்சாலையின் 200 மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் யாரும் வராதபடி சீல் வைக்கப்பட்டது. கழிவுகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும்  பணியில் சுமார் 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் கழிவுகளை வாகனத்தில் ஏற்றும் பணியில் 30 நிமிட ஷிப்டுகளில் ஈடுபட்டனர். பிபிஇ கருவிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.






கழிவு எப்படி அகற்றப்படும்?


பிதாம்பூரில் உள்ள கழிவுகளை அகற்றும் ஆலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரே அதிநவீன எரிப்பு ஆலை ஆகும். இது CPCB வழிகாட்டுதலின் கீழ் ராம்கி என்விரோ இன்ஜினியர்களால் இயக்கப்படுகிறது. தரையில் இருந்து 25 அடி உயரத்தில் கட்டப்பட்ட சிறப்பு மர மேடையில் கழிவுகள் எரிக்கப்படும். இது கடுமையான அறிவியல் நெறிமுறைகளின்படி நடைபெறும்.
ஆரம்ப சோதனையானது, பருவம், வெப்பநிலை மற்றும் எரிப்பதற்கான அளவு ஆகியவற்றை தீர்மானிக்கும். மணிக்கு 90 கிலோ வேகத்தில், 337 டன் கழிவுகளை அகற்ற தோராயமாக 153 நாட்கள் ஆகும். வேகத்தை மணிக்கு 270 கிலோவாக அதிகரித்தால், அதற்கு 51 நாட்கள் ஆகும். இந்த பணியின் போது சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சிறப்பு கவனம் எடுக்கப்படுகிறது.


பறிபோன 5,000 உயிர்கள்:


நச்சுக் கழிவுகளில் மண், பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் இருந்து எஞ்சியிருக்கும் ரசாயனங்கள் உட்பட ஐந்து வகையான அபாயகரமான பொருட்கள் உள்ளன. மெத்தில் ஐசோசயனேட் வாயு வெளியானதால் 5,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற போபால் வாயு சோகத்திற்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 2015-ம் ஆண்டு சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக பிதாம்பூர் ஆலையில் ஒரு பகுதி கழிவுகள் எரிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 90 கிலோ எரிந்தது. இந்த வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள கழிவுகளை ஜனவரி 6, 2025க்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.