தொல்லியல் குழு பயணம்


 

சிவகங்கையில், ”சிவகங்கை தொல்நடைக் குழு” என்னும் பெயரில்  தொல்லியல் ஆர்வலர்கள் அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இது தொல்லியல் எச்சங்களை பாதுகாத்தல், பாதுகாக்க மாணவரிடத்தில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரி அருங்காட்சியகத்தில் தொல்லியல் சார்ந்த நிகழ்வுகள், கருத்தரங்குகள், நடத்துதல். புதிய  கல்வெட்டுகள் தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அதை வெளிப்படுத்துதல் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற பணிகளோடு பொது மக்களையும் மாணவர்களையும் தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு களப்பயணமாக அழைத்துச் சென்றும் வருகிறது.

 

சிவகங்கை தொல்நடைக் குழுவின் தொல்நடைப் பயணம் 7-ல் மதுரை மாவட்ட தொல்லியல் தலங்களில் பயணம் மேற்கொண்டு பார்த்து மகிழ்ந்தனர்.  

 

திருவாதவூர்.


 

மதுரை மேலூர், திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்த இல்லம், திருமறைநாதர் உடனுறை வேதவல்லி திருத்தலம், ஆவுடையார் கோவில் கலைப் பாணியில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு சிவனாரின் கால் கொலுசு ஒலி கேட்ட இடமாகச்சொல்லப்படும் நூற்றுக்கால் மண்டபம். மாணிக்கவாசகர் சன்னதி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

 

திருவாதவூர் ஓவா மலை தமிழிக் கல்வெட்டு..


 

திருவாதவூர் ஓவா மலையில் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தமிழிக் கல்வெட்டு "பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்" என்னும் முதல் கல்வெட்டு குகை தலத்தின் புருவத்தில் நீர்வடியும் விளிம்பின் மேல் பகுதியில் உள்ளது. மற்றொன்று "உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்" என்ற கல்வெட்டு புருவத்தின் கீழ் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அவற்றையும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு பழமையான செஞ்சாந்து சுருள் வட்ட  ஓவியங்கள்  2000 ஆண்டுகளுக்கு பழமையான சமணப் படுக்கைகள் ஆகியவற்றை கண்டுகளித்தனர், 

 

லாடன் கோவில்.


மதுரை யானைமலையில் முருகனுக்காக எடுக்கப்பட்டுள்ள தனிக் குடைவரையான லாடன் கோவில், அங்குள்ள எட்டு ஒன்பதாம் நூற்றாண்டு வட்ட எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றை பார்வையிட்டனர். 

 

ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு சமண முனிவர்கள் தங்கிய பகுதி.

 

பொதுவாக சமணர்கள், அடைக்கல தானம், அவுடத தானம், கல்விதானம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அறிகிறோம் அவ்வாறான 9,10 ஆம் நூற்றாண்டுகளில் சமணர்கள் தங்களது இறைப்பணியோடு மக்கள் பணியையும் செய்ததற்கான அடையாளங்களில் ஒன்றாக யானைமலையில் மருந்து அரைக்கும் குழியுடன் அமைந்துள்ள சமணப் பள்ளி, அங்கு பாறையின் மேற்பகுதியில் அமைந்துள்ள மகாவீரர் சிற்பங்கள் பாகுபலி சிற்பம், பாசுவத நாதர், பத்மாவதி தாயார் உள்ளிட்ட  இயக்கி சிற்பம் ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்தனர். 

 

யானைமலை தமிழிக் கல்வெட்டு‌.


 

யானை மலை மேற்பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் சமண முனிவர்கள் வாழ்ந்த சமணப் படுக்கை அமைந்துள்ள இடத்தில் அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தவர்கள் பற்றிய விவரம் அடங்கிய தமிழி எழுத்துக் கல்வெட்டு "இவ குன்றத்து உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" ஆகியவற்றை பார்வையிட்டனர்,

 

யானைக்கண் சுனை நீர்


 

மேலும் குழுவில் உள்ள இளைஞர்கள் யானைமலை பகுதியில் தொல்லியல் பாதுகாவலராக விளங்கும் ரவிச்சந்திரன்  அவர்களின் துணையோடு யானைமலையின் கண் பகுதியாக கருதப்படும் சுனை அமைந்துள்ள இடத்திற்குச் சென்று  பருகுவதற்கு இனிய சுனை நீரை பார்த்தும் பருகியும் மகிழ்ந்தனர்.

 

யானைமலை யோக நரசிம்மர்.


 

பாண்டியர்களின் குடைவரையில் வைணவக்குடை வரையில் ஒன்றாக யானைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரை அமைந்துள்ளது இது எட்டாம் நூற்றாண்டில் குடைவிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே எட்டாம் நூற்றாண்டு வட்டெழுத்துக்கல்வெட்டு அமைந்துள்ளது இது  பராந்தக நெடுஞ்சடையனின் அமைச்சராக இருந்த மாறன்காரி என்கிற மதுரகவியால் கிபி 770ல் இந்தக் கோயில் கட்டப்பட்டது.. என்ற செய்தியை தெரிவிக்கிறது. யானைமலையின் தாய்ப்பாறையோடு அமைந்த நரசிங்க பெருமாளை வணங்கி தொல்நடைப் பயணத்தை நிறைவு செய்தனர்.  

 

தொல்நடைக் குழு பங்கேற்பு


 

தொல்லியல் தளங்கள் குறித்த செய்திகளை பார்வையிட்ட இடங்களில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா விளக்கிக் கூறினார். சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள். சென்னை, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இருந்து வருகை தந்த தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டோர் இந்த தொல்நடைப் பயணத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன் செய்திருந்தார்.