மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சார்பாக சுமார் பத்து தளங்கள் கொண்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வணிகவளாகம் செயல்பட்டு வருகிறது. பார்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வணிக வளாகத்தில் தங்க நகை முதல் மளிகை பொருட்கள் வரை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.






மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே இருப்பதால் இப்பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக வேன்கள் மூலம் வணிக வளாகத்திற்கு வந்து செல்ல சிறப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். பலரையும் வியக்கவைக்கும் பிரமாண்ட கட்டிடமாக பார்க்கப்படும் இந்த வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

சூப்பர் சரவணா ஸ்டோர்  கட்டடத்தின் 9-வது மற்றும் 10-வது மாடியில் உள்ள பகுதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காரணமாக உடனடியாக பொதுமக்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும்  ஊழியர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீ தொடர்ந்து எரிந்ததால் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. அனீஷ் சேகரும் உதவி மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.



 

இதுகுறித்து மாட்டுத்தாவணி பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் தீ பற்றியதை தொடர்ந்து பலரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வெளியே வந்த பொதுமக்கள் சிலர் நிர்வாகத்தினருக்கு எதிராக கூச்சலிட்டனர். தொடர்ந்து தீ பற்றி எரிந்ததால் மாட்டுத்தாவணி சாலை முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்தது.