அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் 2021-2023 ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளி துவக்க விழா நடைபெற்றது. இதில்  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தினால் வீரவசந்தராயர் மண்டபம் முழுவதுமாக சிதலமடைந்தது. இந்நிலையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்கு பின்பாக இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார். இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக பார்வையிட்டோம்.



 

கோயில் பணிக்காக கல் தூண்கள் நாமக்கல்லில் தயார் செய்யப்பட்டு, 8 தூண்கள் மதுரை கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஓதுவர் பயிற்சிப் பள்ளியை மீனாட்சியம்மன் கோயிலில் மேப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு புதிதாக 6 நபர்களுக்கு பயிற்சி பெற உள்ளனர். அதனையும் துவக்கி வைத்தோம். அதே போல் ராமநாதபுரத்தில் உள்ள கோயில்களையும் பார்வையிட்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க  உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரோப்கார்கள் வசதிகள் முறையாக செய்யப்படும். கோயில்களில் இருந்து எடுக்கப்பட்ட தங்க நகைகள் முறையாக உருக்கப்பட்டு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்பட்டு, அதன் மூலம் வைப்பு நிதி பெறப்பட்டு கோயில் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இதில் எந்த உள்னோக்கமும் இல்லாமல் வெளிப்படை தன்மையோடு செயல்படுவோம். இதற்கான எழும் விமர்சனங்களை தாங்கிக் கொள்வோம்" என்றார்.



 

மேலும் மீனாட்சியம்மன் கோவில் பணிகள் எப்போது முடியும் என்ற கேள்விக்கு, மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் பழமை மாறாமல் முடிக்க வேண்டும் என்பதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து விரைவில் அறிக்கப்படும்" என்றார்



 

அழகர் கோயில் மலைமீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் புனரமைப்பு செய்து குடமுழக்கு நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இணையளங்களில் கோயில் இடங்களை பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அழகர்கோயில் அடிவாரத்திலிருந்து மலைமீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் வரை சாலை பணிகள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.