தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடலோர பகுதியில் நிலவுகிறது. இது வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, நவம்பர் 12 ஆம் தேதியான இன்று பல மாவட்டங்களுக்கு ரெட், மஞ்சள் அலெர்ட்டுகளும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.