இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.




இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள  நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 



இதனை வரவேற்கும் விதமாக மதுரை  தமுக்கம் பகுதியில் உள்ள  தமிழன்னை சிலைக்கு ஆறு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சாலையில் சென்ற பொதுமக்களுக்கு ஆறு தமிழர் விடுதலையை வரவேற்று இனிப்புகள்  வழங்கி கொண்டாடினர். முன்னதாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தமிழக ஆளுநரை திரும்பப் பெற  கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.