பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் நேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொல்லியல் பயிற்சிக்காக தமிழக அரசுக்கு சிவகங்கை தொல்நடைக்குழு  நன்றி தெரிவித்துள்ளது.




 


இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தெரிவித்ததாவது ..,” நேற்று நடைபெற்ற தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிவகங்கை தொல்நடைக்குழு சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றோம். தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு, குடியேற்றப் பகுதிகளின் காலக்கண்ணாடியென கீழடி, சிவகளை உள்ளிட்ட தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தொல்லியல் துறை வாயிலாக ஆர்வமுடைய 1000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் பயிற்சி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.





ஆசிரியர்கள் ஒவ்வொரு சிற்றூர்களிலும் நகரங்களிலும் பரவி பணி செய்து வருபவர்கள் அவர்களுக்கு அவ்வூரைச் சார்ந்த அனைத்து விவரங்களும் தெரியவரும்  ஆசிரியர்களுக்கு தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கும் போது தொல்லியல் எச்சங்களை கண்டறிவதிலும் பாதுகாப்பதிலும் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.



 

இந்நிகழ்விற்கு முன்னெடுத்துள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் சிவகங்கை தொல் நடைக் குழு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.



 

மேலும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில்..,” இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்னும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டிய தேவை உள்ளது. 150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 2813 நடுநிலை பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.  அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளில்  150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். பள்ளி பராமரிப்புக்கென 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1000 மாணவர்கள் மேல் கொண்ட அரசு தொடக்க மற்றும்  நடுநிலை பள்ளிகளில் அனைத்து வசதிகளை உள்ளடக்கிய கட்டமைப்பு 90 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

 

100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளும், சாதனையாளர்கள் படித்த பள்ளிகளும் அதன் தனிச்சிறப்பு மாறாமல் இருக்க, 25 கோடி மதிப்பீட்டில் அவை புதுப்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.  சிறந்த தலைமையாசிருக்கு அண்ணா அறிஞர் தலைமைத்துவ விருது வழங்கப்படும்.அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.  25 கோடி மதிப்பீட்டில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.  சிறந்து விளங்கும் மாணவர்களை தேசிய மற்றும் உலக அளவில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கோடை காலத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு மலைசார்ந்த சுற்றுலாதளங்களில் சிறப்பு பயிற்சிகள் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.