ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  "கடந்த 2020 மே மாதம் தொண்டியில் போலியாக மருத்துவம் பார்த்த ராஜலட்சுமி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில்  வேண்டுமென்றே போலீசார்  ராஜலட்சுமியிடம் பொய் புகார் வாங்கி இந்த வழக்கில் என்னையும் சேர்த்தனர். இதில் என்னை கைது செய்த காவல்துறையினர், என் வீட்டிற்கு வந்து கொடூரமான தாக்குதலை நடத்தி பின்னர் என்னை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராஜலட்சுமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கறிஞருக்கும்,  எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் என்னை துன்புறுத்தி பொய்யான புகார் வாங்கி கைது செய்தார் என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த வழக்கில் திட்டமிட்டு பொய்யான புகார் தயார் செய்து, எனக்கு ரத்தக்காயம் ஏற்படுத்திய திருவாடனை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சரவணன் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சிறைதுறை கண்காணிப்பாளர் துரைசிங்கம்,  காவலர் செந்தில்குமார், அரசு மருத்துவர் ஆகியோர்   மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து  உரிய இழப்பீடு பெற்றுத்தர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி  இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் தெரிவித்ததாகக் கூறப்படும் பெண்  தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதில்," வழக்கறிஞர் மீது பொய்யான புகார் கொடுக்கச் சொல்லி காவல்துறை துணை கண்காணிப்பாளர், (DSP) மற்றும் காவலர்கள் தன்னை தாக்கி வற்புறுத்தி புகார் பெற்றதாக தெரிவித்திருந்தார்.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பிற்காக ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 



 


மூதாட்டியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மூவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து  


ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜா, மாரீஸ்வரன், அருணாச்சலம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு,"கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூவரும் இணைந்து பரிதாவை கொலை செய்துவிட்டு நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கை பொறுத்தவரை பரிதா உயிரிழந்த மறுநாளே இயற்கை மரணம் எனக் கருதி அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள்  நிகழ்வதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. அவரது இறப்பில் பரிதாவின் மகனுக்கும் எவ்வித, சந்தேகமும் இல்லை.  அதனடிப்படையில் பார்க்கும் போது, மனுதாரர்கள் மீது வழக்கு போலியாக  பதியப்பட்டுள்ளது போல் தெரிகிறது.  ஆகவே,  மனுதாரர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.