காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கட்சி தொண்டர் சிலரை சந்திக்க சிவகங்கை வந்திருந்தார். அப்போது  சிவகங்கையில் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்..,"தி.முக ஆட்சி அருமையாக நடைபெற்று வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு மத்திய அரசு பல இடையூறுகளை கொடுத்தாளும் அதையும் மீறி முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். பல்வேறு நலத் திட்டங்களையும் செயல்படுத்துகிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.  படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.






தமிழ்நாட்டில் முன்பு ஆட்சி செய்தவர்கள் கஜானாவை காழி செய்துவிட்டனர். இப்போது தான் அதனை சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு  கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. எனவே தமிழ்நாட்டின் நிதி நிலை இனி மேம்படும். சொத்து வரியை உயர்த்தினால் தான் நிதியை அதிகப்படியாக வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தால் தான் தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. அதனை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் கொண்டுவரும் என நம்புகிறோம். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் அளவுக்கு மீறி பெட்ரோல் - டீசல் உயர்ந்தி வருகிறது. மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். போர் மற்றும் கச்சா எண்ணெயை காரணம் காட்டி பெட்ரோல் - டீசல் விலையில் கொள்ளையடிக்க கூடாது.



 

அமித்ஷா - மோடி பேச்சுகளால் அச்சம் ஏற்படுகிறது. இவர்களின் கொள்கை முடிவால் சோவியத் ரஷ்யாபோல உடைந்துவிடுமோ  என்ற பயம் ஏற்படுகிறது. இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்தியை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. ஹிந்தியை கற்றுக் கொண்டால் பக்கோடா, பானிப் பூரி விற்று பிழைத்துக் கொள்ளலாமே தவிர பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைய முடியாது. இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் விவசாயம் தான். இயற்கை விவசாயத்தை உடனடியாக கொண்டு வந்தால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை படிப்படியாக கொண்டுவந்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது" என்றார்.