மதுரை மாவட்ட அரசு அலுவலர்கள் , தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் 8 வாகனத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தலைநகரை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்


மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது.  தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது.




ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப்படை, கடலோர காவல்படி, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் மீட்புபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த மிக்ஜாம் புயலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளாத சொல்லப்படுகிறது.


உசிலம்பட்டி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு




நிவாரணம் - ஆறுதல்


மிக்ஜாம் புயல் தாக்குதலால் சென்னை மாநகரம் தற்போதும் மீளமுடியாது பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உணவு, மின்சாரமின்றி பலரும் மழைநீரில் தவித்து வரும் சூழலில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.




உதவிக்கரம் நீட்டிய மதுரை மாவட்டம்


இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் 8 வாகனத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.


நாளை மாலைக்குள் 100 சதவீத மின் விநியோகம்


"சென்னையில் தற்போது 343 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 18 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை மாநகரில் 77 இடங்களில் மின்தடை நீடிக்கிறது. வியாசர்பாடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் சில பகுதிகளில் மின் தடை நீடிக்கிறது.  


இன்று மாலை அல்லது நாளைக்குள் 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 277 இடங்களில்  மின் தடை நீடிக்கிறது. மொத்தமாக வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் 655 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் நாளை மாலைக்குள் 100 சதவீதம்  மின் இணைப்பு வழங்கப்படும்" என வெள்ள நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.