'தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட கூரைக் கடை மாதிரி' நல்லா.., அமைப்பா தெரிஞ்சது சேகர் ஹோட்டல். மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரே அமைந்துள்ளது அந்த அசைவ ஹோட்டல். ஆரம்ப காலகட்டத்தில செக்போஸ்ட் பகுதியில் இருந்ததால இப்ப வரைக்கும் அந்த பெயர் ஒட்டிக்கிச்சாம். ஆமா செக்போஸ்ட் சேகர் ஹோட்டல் என்றால் மேலூரில் ஒரு அடையாளமா பார்க்கப்படுகிறது. பழைய டிரம்மு, பித்தாள அண்டா, இலை போட ஒரு ட்ரே என்று எளிமையா தெரிஞ்சது ஹோட்டல் முகப்பு.
ஹோட்டலுக்குள் வெடிச்ச பருத்தி மாதிரி சைடிஸ்கள் நம்மை எட்டி பார்க்கும். அதுமேல் அழாக போர்த்தி வச்ச வாழை இலை கண்ணுக்கு குளிர்ச்சி. சுக்கால போட்ட வெள்ளபூடு வாசம் லேசா மணக்குது. மட்டன் குழம்புல போட்ட கொழுப்பு வெள்ள பளிங்கி மாதிரி மினுக்குது. குடல் வறுவல பாத்தா பசி கிள்ளிவிடும். மீன் மண்ட சாப்புடவே தனி ரசிகர் கூட்டம் இருக்கு. அசைவத்துக்கு நடுவே காய்கறிகளும், அம்மில அரைச்ச துவையலும் ஆள தூக்கும். நாட்டுக்கோழி குழம்பு எடுத்து சோத்துல குழி பறிச்சு ஊத்துனா சாத்தையார் அணை மாதிரி மகுந்து நிக்கும். மீன் குழம்பு டேஸ்ட எந்த தமிழனும் அடிபொலினு தான் சொல்லுவான். சிக்கன் 65 கலரு கண்ண பறிக்கும். இப்படி கலகலப்பான மதிய சாப்பாடுக்கு கூட்டம் அள்ளுவிடும்.
சில நேரம் கல்யாணவீட்டு விருந்து மாதிரி உக்காந்து சாப்புட இடம் கிடைக்காது. அந்த அளவுக்கு வருகை இருக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும் போது வியர்வை விறுவிறுக்கும், வெளியே வெயில் மண்டையை பொளக்கும் ஆனாலும் இதையெல்லாம் பெரிய விசயமாக எடுத்துக்கொள்ள விடாது சேகர் அண்ணெ கடை சாப்பாடு. சேகர் அண்ணனுக்கு வெளியூர் கஸ்டமரும் அதிகம் அதனால போன் செஞ்சு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லும் நபர்கள் ஏராளம். இந்த வழியே செல்லும் லாரி ஓட்டுநர்கள் பார்சல்களை கையில் பிடிச்சுட்டு போவாங்க.
அரசியல்கட்சி கரைவேட்டி காரங்க முதல் பள்ளிக் கூட சிறுவர்கள் வரைக்கும் பலதரப்பட்ட மக்கள் கடைக்கு வந்து போராங்க. கடை உரிமையாளர் சேகர் நம்மிடம் பேசும்போது, "முத்துக்கருப்பன் - சேவாத்தாள் இவங்க தா எங்க அப்பா, அம்மா கிட்டதட்ட 30 வருசத்துக்கு முன்னாடி இந்த கடைய ஆரம்பிச்சாக 15 வருசமா நான் தலைமை எடுத்து நடத்துறேன். கடை வெளிய இருந்து பார்த்தா தெரியும் செக்போஸ்ட் ஏரியா. அங்க தான் ஆரம்பத்துல கட இருந்தது. அப்பயெல்லாம் நாலு பேரு தான் கடையில உக்காந்து சாப்புட முடியும். செக்போஸ்ட் ஏரியால கடை இருந்ததால செக்போஸ்ட் சேகர் கடைனு அடையாளாமாய்ருச்சு. அப்பயெல்லாம் வேலை ஆட்கள் இல்ல. எங்க குடும்பத்துல அக்கா, தங்கச்சி, அப்பா, அம்மானு குடும்பத்து ஆட்கள் கடைய பார்த்துக்கிட்டோம்.
அப்போ செக்போஸ்ட் செயல்பட்டதால லாரி, டிரைவர் கண்டெக்டர்னு இந்த பக்கமா போறவங்க எல்லாம் நம்ம கடையில தான் சாப்ட்டு போவாங்க. காலையில இட்லி, தோசை, பூரினு சூடா போடுவோம். அப்ப கொஞ்சம் பட்டாணி குழம்பும் கொடுப்போம். அதுக்காகவே பலபேர் எங்களுக்கு கஷ்டமர். மதியான அசைவ சாப்பாடு, அதனால கேட்டு, கேட்டு சாப்புடுவாங்க.
சாப்பாடு காசு கூடுனாலும், எத்தன வருசம் ஆனாலும் சாப்பாடு டேஸ்ட்டு இப்படித்தான் இருக்கும். அது தான் என் ஹோட்டலுக்கு பிளஸ். 10 ரூவால இருந்து சாப்பாடு குடுக்குறோம், இன்னைக்கு நிலைமைக்கு 90 ரூவா. பார்சல் வாங்குனா 80 ஆகும். ஒரு பார்சல் வாங்குனா தாராளமா ரெண்டு பேரு சாப்புடலாம். காலையில டிபனவிட மதியான சாப்பாட்டுக்கு தான் நம்ம கடையில அலை மோதும். எப்படி கூட்டம் வந்தாலும் 250 பேத்துக்குதே சாப்பாடு செய்வோம். மதியம் 12 டூ 3 வரைக்கு தான் கடை இருக்கும். யாராச்சும் போன் பண்ணி சொல்லிவச்சா சாப்பாடு எடுத்து வைப்போம். அந்த அளவுக்கு டிமாண்ட் இருக்கும்.
அதனால நம்ம கடையில பழசு பதுக்குறதுக்கு வேலையில்ல ஆமா ஃபிரிட்ஜ் கூட கடையில இல்ல. தண்ணிய கூட அன்னன்னைக்கு தான் வாங்குவேன். என்ட வேலை செய்ற பசங்களும் ஜூட்டிக்காதா இருப்பாங்க. அதனால சர்வீஸும் தரமா இருக்கும். ஒவ்வொரு நாளும் சாப்பாட்ட சிறப்பா அமைச்சிடுவோம் அதனால எல்லாரும் தேடி வர்ராங்க. சாப்பாடு வாங்கினா நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு, குடல் குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் குழம்புனு எல்லாமே குடுப்போம். சைடிஸ் வேணும்னா தனியா வாங்கிக்கிறுவாங்க.
அது போக மதியம் மட்டன் பிரியாணியும் நம்மட்ட கிடைக்கும். சாப்பாட வீட்ல மாதிரி தட்டு வச்சு வடிப்போம் அதனால சோறு கூட நம்மட்ட வீட்டுச் சுவையில தான் இருக்கும். நாட்டுக் கோழி ரெகுலரா வாங்குற கடையில மஞ்ச தடவி தீயில நல்லா வாட்டி தான் குடுப்பாங்க. பக்கத்தில இருந்து பக்குவமா பாத்து வாங்கிட்டு வருவேன். அதனால நம்மட்ட சாப்பாடு எப்பவும் சோட போகாது. நாட்டுக்கோழில வற மிளகா, மஞ்ச சீரகம் தூக்கலா இருக்கும். இத நிறைய கஸ்டமர் விரும்பி சாப்புடுவாங்க. ஆண்டவன் புண்ணியத்துல கடை நல்லா போகுது" என்று முகம் மலர்ந்தார் சேகர் அண்ணெ.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!