மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைப் பகுதியில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக சுமார் 461 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் அருகில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தி.மு.க., சேர்மன் ரஞ்சனியின் கணவரும், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளருமான சுதந்திரம், அ.தி.மு.க., கவுன்சிலர் பாண்டியம்மாள் என்பவரின் கணவர் உக்கிரபாண்டி, அமமுக கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி நேர்பார்வையில் சுமார் 28 புதிய கடைகள் அமைக்கும் பணி நேற்றைய முன்தினம் நடைபெற்றது.






இந்நிலையில், இந்த கடைகள் அமைக்கும் பணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதியின்றி நடைபெற்றதாகவும், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி கடைகள் அமைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




 

மேலும், ஆணையாளரின் புகார் மனு குறித்தும், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கடைகளை அமைத்தது குறித்தும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் தி.மு.க., சேர்மனின் கணவர் தலைமையிலான குழுவினர் உரிய அனுமதியின்றி கடைகள் அமைத்தாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.