மதுரையில் முதலமைச்சரின் காணொலி நிகழ்ச்சிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை எடுத்துசென்ற போக்குவரத்து காவல்துறையினர்.
மாமதுரை விழா
யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் இன்று ஆகஸ்ட் 8, மற்றும் 9, 10, 11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா” நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் தெப்பக்குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவா்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழா, அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்களும் அமைக்கப்பட்டுளளன. ஏற்கனவே மாமதுரை நிகழ்விற்கான அறிமுக பாடலை cii & யங் இந்தியன் குழுவினர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இந்த நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. அப்போது போக்குவரத்தே இல்லாத இடத்தில்., போக்குவரத்துக்கு இடையூறு எனக் கூறி, அழைத்து வந்த மக்களின் பைக்குகளை அபராதம் என்ற பெயரில் க்ளியர் செய்தபோது போக்குவரத்து காவல்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது.
வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சி
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த பொதுமக்கள், மதுரை தமுக்கம் மைதான வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை போட்டோ எடுத்து அபராதம் விதித்தனர். அதே போல் அங்கிருந்த வாகனங்களை எடுத்துச் சென்ற போக்குவரத்து காவல்துறையினரின் செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமுக்கம் மைதான பகுதியில் நோ பார்க்கிங் என்ற பகுதி இல்லாத சூழலில், திடீரென போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி வம்படியாய் அபராதம் வசூலிப்பதா?
அமைச்சரின் ஓட்டுனர், மாநகராட்சி கவுன்சிலர்களும், ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும் கார்களில் சீட் பெல்ட் கூட போடாமல் வாகனங்கள் ஓட்டியபோது சல்யூட் அடித்து அனுப்பிவைத்தனர், காவல்துறையினர். அவர்களுடைய வாகனங்களும் உட்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது. அவை போக்குவரத்து இடைஞ்சலாக தெரியாமல் போனது. ஆனால் மைதான வளாகத்திற்கள் நிறுத்திவைத்திருந்த பொதுமக்கள் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. என அபராதம் விதிப்பது என்ன மாதிரியான செயல்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு கூவி கூவி அழைத்துவந்துவிட்டு இப்படி வம்படியாய் அபராதம் வசூலிப்பதா என புலம்பியபடி சென்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ma Madurai Festival: மதுரை...மதுரை...மதுரை.. மா மதுரை விழாவில் முதல்வர் ஸ்டாலினின் பெருமித பேச்சு - அப்படி என்ன பேசினார்?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “மா மதுரை” விழா: காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன ஸ்பெஷல்?