நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.  மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.  மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும்,  வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க  ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டி.கல்லுப்படி பேரூராட்சியில் 10- வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக ராமகிகிருஷ்ணன் என்பவரின் மனைவி பழனிச்செல்வி போட்டியிட்டார். டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.




வாக்கு எண்ணிக்கை முடிவில் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்பு லெட்சுமி என்பவரும், சுயேட்சை வேட்பாளரான பழனிச்செல்வியும் 284 வாக்குகளை சரி சமமாக பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மேலும் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறிய நிலையில் தி.மு.க வேட்பாளர் சுப்புலெட்சுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



அதனைத்தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்களை அங்கிருந்து வெளியேற்றி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரை தேர்ந்தெடுத்தனர். குலுக்கல் முறையில் சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வியின் பெயர் வந்த போதும், திமுக வேட்பாளர் சுப்பு லெட்சுமி வெற்றி பெற்றதாக முறைகேடாக சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும், குலுக்கல் முறையில் தன்னுடைய பெயர் வந்ததற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் காவல்துறையினர் பதிவு செய்த வீடியோ கேமராவில் உள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



இந்நிலையில் டி.கல்லுப்பட்டி 10 வது வார்டில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் என மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும், மாவட்ட நிர்வாகத்தின் பதிவுகளிலும் உள்ள நிலையில், தனக்கு வெற்றி சான்றிதழ் வழங்காமல், திமுக வேட்பாளருக்கு சாதகமாக தேர்தல் அலுவலர்கள் செயல்பட்டு அவரை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக புகார் தெரிவித்து பழனிச்செல்வி ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து புகார் மனு அளித்தார். 









மேலும் இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, குலுக்கல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை  பார்வையிட்டு,  தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், தேர்தல் அதிகாரியை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.


நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தேர்தல் அதிகாரி, தி.மு.க வேட்பாளரின் ஆதரவாளர்கள் அளித்த அழுத்தம் காரணமாக முடிவை மாற்றி அறிவித்ததாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அழுத்தம் கொடுத்தது யார்? என்ன மாதிரியான அழுத்தம் என்பன குறித்து மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.