நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.  மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 



மதுரை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் 53.99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது.

 

மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும்,  வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது.அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க  ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.



இதனால், மதுரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.தொடர்ந்து,  திமுகவின் பெண் வேட்பாளர்களில் ஒருவர் மேயர் பதவியில் நியமிக்கப்பட உள்ளார். இந்த ரேசில் மதுரை முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மருமகள் 32-வார்டில்  விஜய மெளசினி,  5-வது வார்டு  வாசுகி சசிகுமார்,  ரோகினி பொம்மதேவன், பாமா முருகன்,  செல்வி, இந்திராணி உள்ளிட்ட பலரும் ரேசில் உள்ளனர்.

 


துணை மேயருக்கு ஜெயராமன், மூவேந்திரன்  உள்ளிட்ட சிலரின் பெயரும் வாசிக்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தனிக்குழு மேயர் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழம்பியுள்ளனராம். மேயர் வேட்பாளர் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இதில் கவனம் செலுத்துவார். அதேபோல் அமைச்சர் மூர்த்தி துணை மேயர் பதவிக்கு தனது ஆதரவாளர்களில் ஒருவரை தான் துணை மேயராக்க வேண்டும் என முனைப்பு காட்டுவார் என உடன்பிறப்புகள் தெரிவித்துள்ளனர். மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் என எல்லா பதவிக்கும் மதுரையின் இரண்டு அமைச்சர்களின்  தலையீடு இருக்கும் என்பதால் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் அமைச்சர்களை சந்தித்து மரியாதை செய்து வருகின்றனர்.