கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமிர்தவள்ளி என்ற பெண்  கணவனால் எரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மது குடிக்க காசு கொடுக்காத மனைவியை, மது போதையில் வந்த கணவன் மண்ணெண்ணை ஊற்றி எரித்தார். மதுவிற்காக சொந்த உறவுகளைக் கூட கொலை செய்யும் அளவிற்கு துணியும் போதை ஆசாமிகளின் செயல்  ஆங்காங்கே தினமும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் மதுவிற்கு காசு கொடுக்காத பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

மதுரை விரகனூரை சேர்ந்த  பூமயில் (80) தனது மகன்  செந்தில் (40) உடன் வசித்து வருகிறார். தினமும் போதை தலைக்கேறும் அளவிற்கு குடிக்கும் பழக்கம் கொண்டவராக செந்தில் இருந்துள்ளார். கொத்தனார் வேலை பார்க்கும் செந்தில் அவ்வப்போது மது குடிக்க தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மது அருந்த பணம் கொடுக்க முடியாது என பூமயில் தெரிவித்துள்ளார். தாய் பணம் இல்லை என மறுத்ததால் ஆத்திரமடைந்த செந்தில் தனது தாயின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.



 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற மகனே தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இலங்கையர்களுக்கு இந்தியா பாஸ்போர்ட்; மூத்த கண்காணிப்பாளர் மீது சிபிஐ வழக்கு பதிவு!

 

"இதயம், குடல், கல்லீரல் என உள்ளுறுப்புகள் சார்ந்த வாழ்வியல் நோய்கள் மற்றும் தற்கொலை எண்ணம், மன அழுத்தம் என உளவியல் பிரச்னைகளுக்கும் கூட மதுப்பழக்கம் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. மதுவிற்காக சொந்த உறவுகளை கூட கொலை செய்யும் மனநிலை சமூகத்தின் மோசமான நிலையை ஏற்படுத்தும். எனவே மருத்துவர் ஆலோசனை மூலம் மதுப்பிரியர்களை குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும். அரசு மதுவை வருமான பார்க்காமல் அதனை தடை செய்துவிட்டு சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும்" என சமூக ஆர்வலர்கல் கோரிக்கை விடுக்கின்றனர்.