மதுரை பெரியசாமி நகரில் 2 மாதமாக தெருக்களில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர், காய்ச்சல் தொற்றுக்கு ஆளாகும் பொதுமக்கள், உங்க சொந்த காசில் வேண்டுமென்றால் நீங்களே ஆள்வைத்து சரி செய்துகொள்ளுங்கள் என தி.மு.க., கவுன்சிலர் அலட்சியமாக கூறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

 

பெரியசாமி நகரில் கழிவுநீர் நிரம்பி தெருக்களில் ஆறுபோல ஓடுகிறது

 

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 21- ஆவது வார்டுக்குட்பட்ட  பெரியசாமி நகர் பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இந்த பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் நிரம்பி தெருக்களில் ஆறுபோல ஓடுவதால் நிரந்தர தீர்வு கிடைக்காமல் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கழிவு நீர் தெருக்களில் தேங்கி நிற்பதாலும், தெருக்களில் கழிவுநீர் நிரம்பி ஓடுவதாலும் அந்த வழியாக செல்லக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கழிவுநீரில்  நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

 


 


தொற்றுபரவும் பகுதியாக மாறியுள்ளது


 

இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாள்தோறும் பல்வேறு காய்ச்சல் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தங்கள் பகுதியில் கழிவு நீரை அகற்றுவதற்கு நிரந்தர முடிவு எடுக்ககோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தொற்று பரவும் பகுதியாக மாறியுள்ளது.

 

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அத்தனை பேருக்கும் காய்ச்சல் பரவுகிறது

 

இது தொடர்பாக பேசிய அப்பகுதி பெண்கள்....,” எங்கள் பகுதியில் 2 அரை மாதங்களாக சாக்கடையாக தான் ஓடுகிறது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அத்தனை பேருக்கும் காய்ச்சல் பரவி என்ன காய்ச்சல் என தெரியாமல் பயந்து போய் கிடக்கிறோம். சாக்கடை தெருவெல்லாம் ஓடுது மேலும் இது குறித்து தி.மு.க., கவுன்சிலரிடம் கேட்டால் உங்க சொந்த காசில் வேண்டு மென்றால் நீங்களே ஆள்வைத்து சரி செய்துகொள்ளுங்கள் என கூறுகிறார்” என்றனர்.

 

மதுரையில் பல ஏரியாவில் பிரச்னை இருக்கு தி.மு.க., கவுன்சிலர் தகவல்

 

இது 21 வார்டு கவுன்சிலர் கஜேந்திரனிடம் பேசினோம்...” பெரியசாமி நகரில் மட்டும் பிரச்னை இருக்கா மதுரையில் பல  ஏரியாவில் இது போல சாக்கடை பிரச்னை இருக்கு. இங்க மட்டும் தான் பிரச்னை இருக்கு என்பது போல செய்தி போடுறீங்க. போனில் ரெக்கார்டு செய்றீங்க நான் போனில் பேசமாட்டேன். எதுவாக இருந்தாலும் ஆபீஸுக்கு வாங்க என்றபடி பேசியபடி போனை கட் செய்தார்.

 

பெரியசாமிநகரில் சுகாதாராக்கேடு ஏற்படுவதை தடுத்து உடனடியாக கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.