கங்குவா


சூர்யாவின் கங்குவா படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சிலர் படம் நல்லா இருக்கிறது என்ற்கிறார்கள்.சிலர் கழுவி ஊற்றுகிறார்கள். உண்மையில் கங்குவா படத்தில் என்ன பிரச்சனை. ஊடகங்கள் இப்படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்கின்றனவா ? படத்தில் எது எல்லாம் பாசிட்டிவ் ? எது நெகட்டிவ் என்பதை பார்க்கலாம்.


கங்குவா பாசிட்டிவ்


கங்குவா படத்தில் பாராட்டிற்குரிய அம்சம் என இப்படத்தின் ப்ரோடக்‌ஷன் டிசைனை சொல்லலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் ஒரு கதையில் நம்பகத்தன்மையைக் கொண்டு வர அபாரமான உழைப்பு செலுத்தப்பட்டிருக்கிறது. சுற்றி கடல் சூழ்ந்த ஐந்தீவுகளில் நடக்கிறது படத்தின் கதை. ஒவ்வொரு நிலப்பகுதியையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வித்தியாசப்படுத்தி காட்டியிருகும் விதம் சிறப்பு. குறிப்பாக வில்லன் உதிரன் அரசனாக இருக்கும் அரத்தி தீவு மற்ற தீவுகளைக் காட்டிலும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு உதிரனின் சிம்மாசனம் அமைந்திருக்கும் இடம் ஒரு பிரம்மாண்டமான விலங்கின் எலும்புக் கூட்டில் இருப்பதைப் போல் அமைத்திருப்பது ஒரு மாஸ்டர் டச். படத்தில் வரும் மற்ற நிலங்களுக்கும் இந்த மாதிரி ஒவ்வொரு தனித்தன்மையை சேர்த்திருக்கிறார்கள். ஆயுதங்கள் , உணவுகள் , ஆபரணங்கள் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆயிர கணக்கான மக்கள் கடும் குளிரில் ரத்தமும் வியர்வையும் சிந்தி இப்படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். கங்குவா படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்களின் நோக்கம் இந்த உழைப்பை மலினப்படுத்தும் நோக்கத்தில் இல்லை.


தேவிஶ்ரீ பிரசாதின் இசை


படத்தில் அடுத்தபடியாக பாராட்டப்பட வேண்டியது இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாதின் இசை. படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன ஆனால் அது ஒலிப் பொறியாளரின் தவறே ஒழிய இசையமைப்பாளரின் தவறு இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா சிட்டுவேஷன்களுக்கும் சிறப்பான பாடல்களையே வழங்கியுள்ளார் டி.எஸ்.பி. ஃபயர் சாங் , யோலோ , மன்னிப்பு ஆகிய மூன்று பாடல்களும் மிக சிறப்பாக உருவாகியிருக்கின்றன. படத்தில் உணவுப்பூர்வமாக பார்வையாளர்கள் ஒன்ற முடியாதது இந்த பாடல்களின் ரீச்சையும் கெடுக்கும் விதமாக அமைந்தது கெட்ட பாக்கியம். 


முதல் 30 நிமிட காட்சி


கங்குவா படத்தில் எல்லா தரப்பு ரசிகர்களையும் எரிச்சலூட்டியது என்றால் அது முதல் 30 நிமிட காட்சிகள். சூர்யாவை செம கூலான ஒரு கதாபாத்திரமாக காட்டுவதே சிறுத்தை சிவாவின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த காட்சிகளில் மிக சுமாரான நடிப்பையே சூர்யா வெளிப்படுத்தி இருக்கிறார். அயன் பட தேவா , கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி , ஏன் 24 படத்தில் வாட்ச் மெக்கானிக் கதாபாத்திரத்தைக் கூட சூர்யா சிறப்பாக நடித்திருப்பார்.அப்படியென்றால் கங்குவா படத்தில் பிரான்சிஸ் கதாபாத்திரம் ஏன் வர்க் அவுட் ஆகவில்லை? காரணம் இந்த கதாபாத்திரம் எந்தவித தனித்துத்தோடும் எழுதப்படவில்லை. பேப்பரில் எதுவுமே இல்லாமல் ஆன் ஸ்பாட்டில் சூர்யாவை நடிக்க வைத்தது போல் தான் இந்த காட்சிகள் இருந்தன. சூர்யாவுக்கு மட்டும் என்றால் கூட பரவாயில்லை இந்த சீனில் இருக்கும் திஷா பதானி , யோகி பாபு , கே.எஸ் ரவிகுமார் ,ரெடின் கிங்ஸ்லி என யாருக்குமே பேப்பரில் டயலாக் கொடுக்காதது போல் தான் காட்சிகள் இருந்தன.  இதில் தமிழ் படங்களுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத பவுண்டி ஹண்டர் ஐடியா வேற.


திரைக்கதையில் குழப்பம்


கதைப்படி இரண்டு காலங்களில் கதை நடக்கிறது. ஒன்று 2024 ஆம் ஆண்டு இன்னொன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள். இந்த இரு கதைகளையும் இணைக்கும் புள்ளி ஒரு சிறுவன். கடந்த காலத்தில் கங்குவா என்கிற ஒரு மாவீரன் ஒரு சிறுவனுக்கு சத்தியம் செய்துகொடுக்கிறான். அந்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாததால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து அந்த சத்தியத்தை மீண்டும் நிறைவேற்றுகிறான். இதே மாதிரியான கதைதான் ராஜமெளலி இயக்கிய மாவீரன் படம். நிகழ்காலம் கடந்தகாலம் என இரு கதைகளையும் நல்ல திரைக்கதையில் இணைத்து மாவீரன் படத்தில் சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா அது என்ன ஜானர் படம் என்பதில் தெளிவே இல்லாமல் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு ஆய்வுக்கூடத்தில் இருந்து சிறுவன் தப்பித்து கோவாவிற்கு வருகிறான். அது என்ன மாதிரியான ஆராய்ச்சி ? அவனுக்கு எப்படி  கடந்த காலத்தில் இருக்கும் நினைவுகள் வந்துபோகின்றன ? சிறுவனை விடுங்கள் சூர்யாவுக்கு எப்படி கடந்த கால நினைவுகள் நினைவுக்கு வந்தது ? இது அறிவியலா ? கற்பனையா ? இது ஃபேண்டஸி படமா ? சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமா ? இது பல கேள்விகளோடு தான் படத்தைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நம்முடைய புரிதலில் இருந்து இது இப்படி இருக்கும் என புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. 


சண்டைக்காட்சிகள்


பாகுபலி மாதிரியான ஒரு மிகை கற்பனை படைப்புதான் கங்குவா. அதனால் சண்டைக்காட்சிகள் லாஜிக் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. படத்தில் நடுக்கடலில் சண்டைக்காட்சி , ஆகாயத்தில் விமானத்தில் சண்டை , பெண்களுக்கு என ஒரு தனி சண்டைக்காட்சி , முதலைகளுடன் சண்டை என பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட காட்சிகள் ஒரு பார்வையாளனுக்கு ஒரு உற்சாகத்தையே கொடுக்கவில்லை. காரணம் இந்த காட்சிகள் கதையின் உணர்ச்சிகளோடு தொடர்பேயில்லாமல் வெறும் ஸ்டண்ட் காட்டும் வித்தைகளாக மட்டுமே இருந்துவிட்டதுதான். உதாரணத்திற்கு பாகுபலி படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கிச் செல்கிறார். அது சினிமா தான் என்று தெரிந்தாலும் இப்படி ஒரு பலசாலிதான் தான் அந்த கதாபாத்திரம் என்பது நமக்கு புரிந்துவிடும். அடுத்தடுத்து பிரபாஸின் கதாபாத்திரங்கள் செய்யும் சாகசங்களை லாஜிக் இல்லாமல் நம்மால் அனுபவிக்க முடியும். கங்குவா படத்தில் மிஸ் ஆவது லாஜிக் மற்றும் லாஜிக் இல்லாததை மறைக்கும் மேஜிக்.


மற்றொரு குறைபாடு கோர்வையே இல்லாமல் காட்சிகள் வேட்டப்பட்டு சேர்க்கப்பட்டிருப்பது. சூர்யாவை ஒரு 10 பேர் அடிக்க வருகிறார்கள். பக்கத்தில் வர வர 10 பேர் காணாமல் போய் ஒருத்தர் மட்டும் ஃபிரேமில் வருகிறார் . மீதி 9 பேர் ஒருவன் அடிவாங்கி முடிக்கும்வரை டீ சமோசா சாப்பிட்டு காத்திருக்கிறார்கள். எந்த வில்லன் எங்கிருந்து வருகிறான் , எதிரில் ஒருவன் வருவதற்கும் பின்னால் இருப்பவன் வருவதற்கும் எவ்வளவு நேரம் என்பது எல்லாம் இத்தனை ஆண்டுகால சினிமா பார்த்து ஆடியன்ஸூக்கே தெரிந்துவிட்டது. ஆனால் இந்த எளிமையான விஷயத்தைக் கூட படக்குழு கவனிக்கவில்லை. இது படத்தின் நம்பகத்தன்மையையும் சுவாரஸ்யத்தையும் மொத்தமாக அழித்துவிடுகிறது. 


நடிப்பு


முன்பே சொன்னது போல சூர்யாவின் மிக சுமாரான பெர்ஃபார்மன்ஸ்களில் ஒன்று கங்குவா. காரணம் நடிப்பில் இருந்த ஒற்றைத் தன்மை. கங்குவா படத்தில் சூர்யா மட்டும் இல்லை அத்தனைபேரும் ஒரே மாதிரியான நடிப்பை தான் வெளிப்படுத்தினார்கள். அப்படத்தில் நடிப்பு பயிற்சியாளரின் தவறா என்று தெரியவில்லை. நன்றாக கவனித்தால் மற்ற பீரியட் படங்களில் இருப்பது போல் இல்லாமல் இப்படத்தில் நடிகர்கள் கொஞ்சம் நாடக பாணியில் நடித்திருப்பது தெரியும். தற்கால நவீன நாடகங்கள் பயன்படுத்தும் உடல்மொழி , வசன உச்சரிப்பு முதலியவற்றை கங்குவா படம் கையாண்டுள்ளது. இந்த மாதிரியான நடிப்பில் இருக்கும் ஒரு சவால் ஒவ்வொருத்தரும் தங்களது உடல்மொழிக்கு ஏற்றபடி வசனம் பேசி நடிக்க வேண்டும். இந்த மாதிரியான நடிப்பில் வழக்கமான சினிமாத்தனமான பாடி லாங்குவேஜ் இருக்காது. ஆனால் சூர்யா செய்தது என்னவோ அதே சினிமாத்தனத்தைதான். கொஞ்சம் பேச்சுத் தமிழ் , கொஞ்சம் உரைநடை என தனது செளகரியத்திற்கு ஏற்றபடி வசனம் பேசியிருக்கிறார் சூர்யா. அவரது உடல் மொழி கதைக்கு ஒட்டாமல் செயற்கையான துருத்திக்கொண்டு தெரிகிறது. இன்னும் சொல்லப்போனார் போஸ் வெங்கட் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த முறையில் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். 


கங்குவா திரைப்படம் நிச்சயம் அதன் உழைப்பிற்காக அங்கிகரிக்க வேண்டிய படம்தான். ஆனால் இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்திற்கு நிறைய பொறுப்புகள் இருந்திருக்கின்றன. இயக்குநர் சிறுத்தை சிவா கதைக்கு ஐடியா வேண்டுமானால் சிறப்பாக பிடித்திருக்கலாம். ஆனால் இப்படியான வரலாற்றுக் கதையில் கையாளும் போது அவரது முதிர்ச்சியற்ற இயக்கம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.