இந்தியா முழுவதும் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், வாய்வழி மற்றும் மாக்சில்லோ முக அறுவை சிகிச்சை நிபுணர்கள், காது மூக்கு தொண்டை, தலை மற்றும்  கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுக்காக மிக முக்கியமான பயிலரங்கு நடைபெற்றுள்ளது.

 

முக முடக்குவாதத்துக்கான அறுவை சிகிச்சை


 

தென்னிந்தியாவில் முதன்முறையாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்காக, முக முடக்குவாதத்துக்கான அறுவை சிகிச்சை மேலாண்மை குறித்த சென்னையில் பயிலரங்கு நடைபெற்றது. சென்னை தி ஹெட் அன்ட் நெக் சென்டர் & மருத்துவமனை (THANC) ஏற்பாடு செய்த இந்த 2 நாள் பயிலரங்கில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களின் விரிவுரைகள், அறுவை சிகிச்சை வீடியோ காட்சிகள் மற்றும் உருவகப்படுத்துதல் அடிப்படையிலான பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன. 

 

முக முடக்குவாதத்துக்கான எளிமையான சிகிச்சை


 

முக முடக்குவாதம் என்பது முகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தசைகள் திடீரென்று பலவீனமடைந்து செயலிழப்பது ஆகும். இது பெரும்பாலும் குளிர் காலத்தில் மனிதர்களை தாக்கும் ஒரு நோயாகும். இது வைரஸ் கிருமிகளின் பாதிப்பினால் வருகிறது. வைரஸ்கள் முக நரம்புகளை பாதிக்கும்போது, அந்த நரம்பில் அழற்சி ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. அப்போது நரம்பின் செயல்பாடு தற்காலிகமாக நின்றுவிடும் நிலையில் முக முடக்கு வாதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக முகத்தில் ஒரு பக்கம் செயல்படாத நிலை ஏற்படும். உதடுகள் ஒருபுறம் விலகிக்கொள்வதால் சிரிக்க முடியாது. கண்ணை மூடுவதில் சிரமம் ஏற்படும். சிலருக்கு தலைவலி, தாடைவலி, காதின் பின்புறம் வலி ஏற்படலாம். முக முடக்குவாதம் ஏற்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்துவதற்காக தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் இதற்கான சிகிச்சை என்பது மிகவும் சிக்கலானதாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நவீன மருத்துவமுறைகள் வளர்ந்துள்ளதால் முக முடக்குவாதத்துக்கான அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானதாக மாறியுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் ஏராளமான புதிய மருத்துவ நுட்பங்கள் பயன்படுத்துகின்றன. 

 

முக முடக்குவாதம் காரணமாக இருக்கலாம்


 

சென்னையில் நடைபெற்ற பயிலரங்கை பற்றி THANC மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.வித்யாதரன் பேசுகையில், “நரம்பு சேதம் அடைவதன் விளைவாக முக முடக்கு வாதம் ஏற்படுகிறது. இது முகத்தில் உள்ள தசைகளின் அசையும் திறனை பாதிக்கும். பக்கவாதம், தலையில் காயம், முகத்தில் ஏற்படும் அதிர்ச்சி, மூளைக் கட்டி, பெல்ஸ் வாதம், நாள்பட்ட நடுத்தர காது தொற்று, உமிழ்நீர் சுரப்பிகளில் கட்டிகள், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் மற்றும் மோபியஸ் சிண்ட்ரோம் போன்ற பல நிலைகளுக்கு முக முடக்குவாதம் காரணமாக இருக்கலாம். முக முடக்குவாதம் தானே தீராவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் பிரச்னையை தீர்க்க முடியும்” என்றார்.

 

சமூக தொடர்புகளையும் குறைக்கிறது


 

“முகபாவனை என்பது ஒரு உடல் இயக்க செயல்பாடு ஆகும். இது பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நம்மை வரையறுக்கவும் மற்றவர்களுடன் உறவாடவும் நமது முகபாவனைகள் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. ஒரு நபர் தனது முக நரம்பின் செயலிழப்பால் பாதிக்கப்படும்போது, ​​அவர் உலகத்துடன் நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளும் திறனை இழக்க நேரிடும். அவர்கள் கண்களை மூடும் திறன், தெளிவாக பேசுவது, மூக்கின் வழியாக சுவாசிப்பது மற்றும் எச்சில் வடிதல் இல்லாமல் சாப்பிடுவது போன்றவற்றை இழக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கை தரத்தில் தீங்கு விளைவிக்கும். மேலும் அவர்களின் சமூக தொடர்புகளையும் குறைக்கிறது” என்றும்  டாக்டர் வித்யாதரன் கருத்து தெரிவித்தார்.