மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  25 படுக்ககைளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை


தென் மாவட்ட மக்கள் அதிகளவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை நம்பி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை திறம்பட செய்து முடிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு நோய் தொற்றுகளை தீவிரமாக கட்டுப்படுத்தினர். இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பல்வேறு பாராட்டுகள் கிடைத்தது. இந்நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  25 படுக்ககைளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.


தமிழ்நாட்டில் கோடை மழை


கோடை வெயிலின் தாக்கம் குறைந்து  அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர் மழையால் கொசுவின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மழை ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.


டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை


தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டு, டெங்கு காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, கொசு வலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளன. இதுபோல், குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டு, இங்கு கொசு வலைகள் அனைத்தும் படுக்கைகளில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பருவ மழை காலகட்டத்தில் தான் டெங்கு காய்ச்சல் பரவும், தற்போது பெரிய அளவிலான டெங்கு பாதிப்புகள் இல்லை. தினசரி ஒன்று, இரண்டு நபர்களுக்கே பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. எச்சரிக்கை கொடுக்கும் அளவிற்கான பாதிப்பு இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மதுரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பாதுகாப்பு எச்சரிக்கை


தமிழகத்தில்  8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளது.