தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறினால் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாநகர் செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல் கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து செல்லூர் மருதுபாண்டியர் நகர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கிளிகள் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். இதனை அடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மைக் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அடுத்து அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்த கிளிகளை கூண்டுடன் வந்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது பல மாதங்களாக வளர்த்து வந்த கிளியை தங்களது குடும்ப உறுப்பினர்கள் போன்று வளர்த்ததன் காரணமாக கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வந்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு தெருக்களிலும் நீதிபதியாகச் சென்று கிளிகளை வளர்க்கக்கூடாது பாதுகாக்கப்பட்ட பறவையினம் எனக் கூறி மைக் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு ஒவ்வொரு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். 20க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்று வீட்டில் கிளி வளர்ப்பு செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கால அவகாசத்தை மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும் பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய பொதுமக்கள் தெருநாய்களை பிடிப்பதை விட்டுவிட்டு பிள்ளைகள் போல வளர்க்கும் கிளிகளை பிடிப்பதா? என வேதனை தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: இணையவழி குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்