மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குன்னத்தூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 69 வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கல்யாணி முன்னிலை வகித்தார். அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி , ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன்,  மாவட்ட பாசறை செயலாளர் ஆர்யா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக வீர வரலாறு பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுவது மதுரை மண்ணிற்கு கிடைத்த பெருமையாகும்.



 

திருமங்கலம், கொல்லம் 4 வழி சாலையை எடப்பாடியார் காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிலங்கள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைக்கு அதிமுக மக்களுக்கு கொடுக்கும் இடத்தில் இருந்தோம், இன்றைக்கு மக்களுக்கு கேட்கும்  இடத்தில் இருக்கிறோம். விரைவில் மக்களுக்கு  கொடுக்கும் இடத்திற்கு நிச்சயம் வருவோம். 30 ஆயிரம் கோடி ஊழல், டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3600 கோடி ஊழல், பத்திரப்பதிவு துறையில் 3000 கோடி முறைகேடு என திமுக ஆட்சியில இதயம் வெடிக்கும் வகையில் ஊழல் உள்ளது. இன்றைக்கு விலைவாசி எல்லாம் கடுமையாக உயர்ந்து விட்டது தக்காளி விலை, இஞ்சி விலை, பருப்பு விலைகள் எல்லாம் உயர்ந்து விட்டது. தக்காளி விலையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. இதனால் தக்காளி சட்னியே மக்களுக்கு மறந்து விட்டது. அதேபோல் இஞ்சி விலை ஏறி விட்டதால் இஞ்சி சட்னியும் மறந்துவிட்டது. இதை பற்றி  கவலைப்படாமல் அமைச்சர்கள் ஏகடியம் பேசி வருகிறார்கள். இதை  கண்டிக்கும் இடத்தில் இருக்கும் முதலமைச்சரோ ஒரு கூட்டத்தில் நான் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கெட்டதை தைரியமாக செய்தோம் என்று கூறுகிறார். மக்களாகிய நீங்கள் சரியான  பாடத்தை புகட்ட வேண்டும் விரைவில் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் எனக் கூறினார்.