டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தடை செய்யும் சட்ட திருத்தத்துடன் கூடிய கொள்கை தீர்மானமாக நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 


நேரில் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்க முன்வர வேண்டும்



 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டாங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் கிராமங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...," அரிட்டாபட்டி சுற்றி 7 மலைகளை உள்ளடக்கிய 48 கிராமங்கள் விவசாய பூமியாக உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு இருக்கிற சமணர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்க வேண்டிய பகுதியாகும். இதனை அப்பகுதி மக்கள் வரலாற்று ஆய்வுகளோடு பாதுகாத்து வருகிறார்கள். சிவன் குகை கோவில்கள். குளங்கள் இயற்கையான மலைக்குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ளது. பன்முக தன்மை கொண்ட இப்பகுதியை அழிப்பதற்கு டங்ஸ்டன் என்ற பெயரில் கனிம வளக் கொள்ளைக்கு வேதாந்தாவிற்கு டெண்டர் விட முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் இப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்க முன்வர வேண்டும். 

 


தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.



அரிட்டாப்பட்டி உள்ளிட்ட இரு கிராமங்களை மட்டும் பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவித்து விட்டு மற்றப் பகுதிகளை தமிழக அரசு கைவிட்டதால் இத்திட்டத்திற்கு மத்திய அனுமதித்ததாக வெளிவரும் செய்திகள் சந்தேகமளிக்கிறது. எனவே தமிழக அரசு டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். அச்சட்டம் ஒட்டுமொத்தமாக அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க வேளாண் மண்டலமாக கொள்கை முடிவெடுத்து அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதனை வெளியிடும் பட்சத்தில் மத்திய அரசு தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி டங்ஸ்டன் திட்டத்தை கைவிட தொடர் காத்திருப்பில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.

 

இதனை போராட்ட குழு ஏற்று சட்டமன்றத் தீர்மானத்திற்கு பிறகு போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக தீவிர படுத்த உள்ளனர். முல்லைப் பெரியாறு அணைக்கான பேராபத்து குறித்து தமிழ்நாடு அரசு மௌனம் காப்பதும், அதனுடைய பாசன பகுதியான அரிட்டாப்பட்டி வரையிலும் எடுக்கின்ற நடவடிக்கைகள் மிகுந்த சந்தேகம் அளிக்கிறது . இது குறித்து திறந்த மனதுடன் தமிழ்நாடு அரசு செயல்பட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்” எனத் தெரிவித்தார்.