விஜயுடன் எந்த முரண்பாடும் இல்லை எனவும் எந்த சிக்கலும் இல்லை எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜய்யுடன் எந்த முரண்பாடும் இல்லை. சிக்கலும் இல்லை. விக்கிரவாண்டியில் விஜய் பேசிய தமிழக அரசியலில் தாக்கத்தை, சலசலப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது. விஜயுடன் பங்கேற்றால் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். கொள்கைப் பகைவர்களுக்கு அதற்கான வாய்ப்பை தரக்கூடாது என்பதால் விலகியிருக்கிறேன்.  அதனால் தான் விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் பேசுகையில், “அரசியல் சாயம் பூசப்படும், கொள்கைப்பகைவர்களுக்கு அதற்கான வாய்ப்பை கொடுக்கக்கூடாது என்பதால் விஜய் மட்டும் கலந்து கொள்ளட்டும் என்ற நிலைப்பாடை அவர் எடுத்திருக்கிறாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. பங்கேற்கவில்லை என தெரியும். அது வரவேற்கத் தக்கது. 

Continues below advertisement

அதில் திருமாவளவன் தெளிவாக சொல்கிறார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பு நான் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தேன். இப்போது முரண்பாடு இருப்பதால் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். கூட்டணிக்கான சிக்கல்களை உருவாக்கும் என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை என அண்ணன் திருமா தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவே அரசியலில் எதார்த்தமானதுதான். 

விஜய் பொதுவாக இருந்தபோது திருமா அவரை பொது மனிதராக பார்த்திருக்கலாம். இப்போது அரசியல் எண்ட்ரி, கொள்கைகளை பார்க்கும்போது திருமாவுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர் விலகியிருப்பது வரவேற்கத்தக்கது. 

ஆட்சியில் பங்கு என்று பேசக்கூடிய அளவில் விஜய் கட்சி இருக்கிறதா என்று திருமா ஏற்கெனவே கேட்டிருந்தார். அது தேவையில்லாத ஒன்று. ஆட்சியில் பங்கு என்ற கருத்து என்னுடையதாக இருந்தாலும் அதை சொல்லும் தகுதி இன்னும் தவெகவிற்கு வந்துவிடவில்லை என நாங்கள் சொல்வதற்கு முன்பே திருமா தெளிவாக சொல்லியிருந்தார்.

கொள்கைக்காகவும் தத்துவத்திற்காகவும் நடமாடக்கூடியவர் திருமா. இந்த நிகழ்வும் முடிவும் எதிர்பார்த்ததுதான். வரவேற்கத்தக்கதுதான். ஆதவ் அர்ஜுனா விஷயம் அவர்களின் உட்கட்சி விஷயம். அதைப்பற்றி பேசுவது நாகரீகம் இல்லை. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்களை கண்டிப்பதும் தொடர்வதும் அண்ணன் திருமாவின் நிலைப்பாடு. அதை நாங்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

எங்களை பொருத்தவரை திருமா என்ன நினைக்கிறார் என்பதுதான். திமுக வருத்தப்படும் என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் திருமாவுக்கு இல்லை. ஜனநாயக விரோத சிந்தனை திமுகவிற்கு என்றைக்கும் இருந்தது இல்லை. எங்களோடு கூட்டணியில் இருந்தபோதே இலங்கை தமிழர் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் அவர் எங்களுக்கு எதிராக நின்றிருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் போய் நின்று விட்டதாலேயே அவர் எங்களுக்கு எதிராக நிற்கிறார் என்று எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியற்ற இயக்கம் இல்லை திமுக. நம்மோடு இருப்பதாலேயே மற்ற தலைவர்களுடன் மேடையை பகிர்ந்துகொள்ள கூடாது என்ற சிறு பிள்ளை தனமாக எதிர்பார்ப்பு எப்போது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.