முட்டுக் கிடா வைத்து வளர்த்து வருவதாகவும், கிடா முட்டு போட்டிகளில் பங்கேற்க உசிலம்பட்டி பகுதிக்கு வரும் இந்த இளைஞர்கள் திரும்பி செல்லும் போது ஆடுகளை திருடிச் செல்வதை வாடிக்கையா மாற்றிவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


 


காரில் ஆடு திருடும் இளைஞர்கள்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 6 முதல் 7 மாதங்களில் அதிகளவு ஆடு திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்வதாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம், உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையங்களில் அதிகளவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடு திருடர்களை உசிலம்பட்டி காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நூதன முறையில் ஆடு திருடுவது குறித்து காவல்துறையினருக்கு தகவல் சென்றது.

 


 

இந்நிலையில் கடந்த வாரம் குப்பணம்பட்டி பகுதியில் மீண்டும் காரில் வந்த மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றதாக கூறப்படும் சூழலில், அவர்கள் வந்த கார் நம்பரை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அதன் அடிப்படையில் கம்பம் - வடக்குப்பட்டியைச் சேர்ந்த சூர்யா, நவீன்குமார், கிஷோர் என்ற 3 இளைஞர்களை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் முட்டுக் கிடா வைத்து வளர்த்து வருவதாகவும், கிடா முட்டு போட்டிகளில் பங்கேற்க உசிலம்பட்டி பகுதிக்கு வரும், இந்த இளைஞர்கள். திரும்பி செல்லும் போது, ஆடுகளை திருடி செல்வதை வாடிக்கையா மாற்றிவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் அவர்கள் நூதன முறையில் திருடும் முறைகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை


 

இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி மக்கள் கூறுகையில், "மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டம் சந்திக்கும் இடமாக உசிலம்பட்டி உள்ளது. போதிய தண்ணீர் இல்லாததால் குறைந்த விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயத்தின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை செய்து வருகிறோம். இந்த சூழலில் ஆடு, மாடுகளை திருடிச் செல்லும் சம்பவம் எங்களைப் போன்ற ஏழை, எளிய விவசாயிகளை மிகவும் பாதிக்க செய்கிறது. காரில் ஆடு திருடும் கும்பலனின் அட்டூழியம் மோசமடைந்த சூழலில் தற்போது சிக்கியுள்ளனர். ஆடு தானே திருடினார்கள் என்று அவர்களை விரைவாக விட்டுவிடாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் உசிலம்பட்டி பகுதியில் திருட்டு முழுமையாக கட்டுப்படும்” என கோரிக்கை விடுத்தனர்.