வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், வீடுகள், உடமைகளை இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கும் பல்வேறு தரப்பினர் மற்றும் நடிகர், நடிகைகள் பொருட்களாகவும், பணமாகவும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.

 

கேரள மாநிலம் வயநாடு



கடவுளின் தேசம் என அழைக்கப்படும் தென்னிந்திய மாநிலமான கேரளா, பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாக இருக்கிறது. அந்த ஊரின் சினிமாவை தாண்டி அங்குள்ள இடங்களுக்கும் மக்களும் பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. தென்மேற்கு பருவ காலம் தொடங்கிய நிலையில், மழை வெளுத்து வாங்கியது. இதனால் எதிர்பாராத விதமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அளவில் பாதித்துள்ளது. 360க்கும்  மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் பல மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வர, சினிமா பிரபலங்கள் பலர் கேரள அரசுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.


- Aadi Amavasai Tharpanam 2024: ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!


தீபாவளிக்கு காசு


இந்நிலையில் மதுரை மாநகர் திருநகர் 5-ஆவது பேருந்து நிறுத்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்துபாண்டி(37) - கார்த்திகா (37) தம்பதியினரின் மகளான 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ ஜோதிகா (8) தீபாவளி பண்டிகையின் போது ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தினை வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாவிடம்  வழங்கினார்.  



பொதுமக்கள் நெகிழ்ச்சி


 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து நிவாரண உதவியாக உண்டியலை வழங்கினார். அப்போது மாணவியிடம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா எதற்காக நிதி வழங்குகிறீர்கள் என கேட்டபோது ”வயநாடு நிலச்சரிவில் என்னை போன்ற ஏராளமான மாணவர்களும், சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்துள்ளேன்” என்றார். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மாணவி ஸ்ரீ ஜோதிகா கொரோனா காலகட்டத்தில் இருந்து தனது 3 வயதில் இருந்தே உண்டியலை சேமித்து வைத்து ஏழைகளுக்கு உணவுகளை வழங்கி வந்ததோடு மாதம்தோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு பேனா, பென்சில் ஆகியவற்றை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது உண்டியலை நிவாரண உதவியாக வழங்க வந்த மாணவியின் நல் உள்ளத்தை பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களிடம் இருந்த பணத்தையும் உண்டியலில் செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.