திருடியவர்களை சாமி கேட்கும் என கூறியதால் பயந்து திருட்டு போன நகைகளை வீட்டில் போட்டு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


 


மதுரை மாவட்டம் சமயநல்லூர் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள விநாயகர்கோயில் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் புதன்கிழமை பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.4.20 லட்சம் ரொக்கம் திருடு போனது. திருட்டு குறித்து கண்ணன் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர் உள்ளுர்காரர் என்பது தெரியவந்தது. உடனடியாக கிராமமக்கள் 5 நாட்களாக காத்திருந்தும் திருட்டு குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கிராம மக்கள் ஒன்று கூடி ஊருக்கு கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என கருதி முக்கிய முடிவு எடுத்தனர்.

 




 

அதன்படி, விநாயகர்கோயில் முன் பெரிய தண்ணீர் நிரப்பும் டிரம் வைக்கப்படுவதாகவும் வீட்டிக்கு வீடு, ஒரு கவர் தருவதாகவும் இரவு முழுவதும் கரண்ட் கட் செய்து விடுவதாகவும் திருடிய நபர் கவரில் திருடிய பணம் மற்றும் நகைகளை அந்த டிரம்மில் போட்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் கூடி முடிவெடுத்து கிராமமக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். இரவு, 9.30. மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலை வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றியடைந்து. அதாவது மின் இணைப்பு கட் செய்த சமயத்தில் திருடியவர்கள் அந்த நகைகள் மற்றும் பணத்தை வீட்டு முன் போட்டு சென்றனர். திருடு போன 4.20 லட்சம் பணத்தில் ரூ.1.20 லட்சம் பணத்தை செலவு செய்த திருடர்கள் மீத பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகள் போட்டு சென்றனர். பணம் நகை கிடைத்த உற்சாகத்தில் மீண்டும் மின் இணைப்பு ஆன் செய்யப்பட்டு சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



 

உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் நகை மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைந்தனர். காவல் நிலையத்திற்கு வந்து விரிவாக  எழுதி கொடுத்து விட்டு நகை பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு சென்று விரிவான அறிக்கை கொடுத்து மீண்டும் ஊர் திரும்பினர்.  திருடியவர்களை சாமி கேட்கும் என கூறியதால் பயந்து திருட்டு போன நகைகளை வீட்டில் போட்டு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை  திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டி எனும் கிராமத்தில் 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21,500 பணம் மீட்கப்பட்ட நிலையில் இந்நிலையில் மீண்டும் இதே போல் சம்பவம் சமயநல்லூர் பகுதியிலும் நடைபெற்று மீட்கப்பட்டது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.