"மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பழமையான கற்சிற்பங்களை காணவில்லை" எனக்கூறி வழக்கறிஞர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கோயில் தெப்பக்குளத்தில்  அசைவ உணவுகளின் கழிவு குப்பைகளை கொட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

மதுரை மக்கள் விரும்பும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்


மதுரையின் முக்கிய சுற்றுலாதலமாக உள்ள வண்டியூர் மாரியம்மன தெப்பக்குளம் சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் தெப்பக்குளத்தை சுற்றிலும் பள்ளி, கல்லூரி, கோயில்கள், மண்டபங்கள் உள்ளதால் தெப்பக்குளத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கடந்து செல்கின்றனர்.  இதே போன்று காலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தெப்பக்குளத்தில் நீர் நிரம்பியுள்ளதால் இதில் மீன்கள் குத்தகைக்கு விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இங்கு அவ்வப்போது 400 கிலோவிற்கு மேல் மீன்கள் பிடித்து குத்தகைதாரர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து தெப்பக்குளத்திற்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் தெப்பக்குளத்தை காண்பதற்காகவும் தெப்பக்குளத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

 


 

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் கற்சிலைகள் காணவில்லை


இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தெப்பக்குளம் கோயிலை சுற்றிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியாக உள்ள தெப்பக்குளம் பகுதி முழுவதிலும் அதிக அளவிற்கு சாலையோர கடைகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் சுற்றி இருந்த பழமையான பல்வேறு கற்சிலைகள் காணாமல் போனதாகவும் கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.

மாநகராட்சி பெயரைச் சொல்லி வசூல் வேட்டை


இதுதொடர்பாக பேசிய முத்துக்குமார், “தெப்பக்குளம் பகுதியை சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி அனுமதியின் பெயரில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி இருந்த பழமையான கற்சிலைகள் காணாமல் போகின்றதோடு, சேதமடைந்து கிடக்கிறது. கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவுகளின் குப்பைகளை தெப்பக்குளத்தில் வீசி செல்கின்றனர். இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்துள்ளேன். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்” என்று தெரிவித்தார்”. மேலும் மாநகராட்சிக்கு சம்பந்தம் இல்லாத பகுதிகளில் மாநகராட்சி பெயரைக் கூறி சிலர் வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினர்.