இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தி்யில் மிகவும் பிரபலமானவர். இவரும் நடிகை அதிதிராவும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்தனர். எந்தவொரு நிகழ்ச்சியிலும் இருவரும் இணைந்தே வந்த நிலையில், இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சித்தார்த் - அதிதிராவ் திருமணம்:
இவர்களது திருமணம் தெலங்கானாவில் வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடைபெற்றது. மணமக்களான அதிதிராவ் – சித்தார்த் ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சமீபகாலமாகவே ஒன்றாக பொதுவெளியில் உலா வந்த சித்தார்த் – அதிதிராவ் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் வந்தது. சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று திருமணம் நடந்துள்ளது
எளிமை:
கடந்த மார்ச் மாதம் நடந்தது திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே திருமணம் இல்லை என்றும் விரைவில் திருமணம் என்றும் அதிதி தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், மிக எளிமையாக சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் நடைபெற்றுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சித்தார்த்திற்கு தற்போது 45 வயதாகிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக திரைத்துறையில் உள்ளே வந்தவர் பாய்ஸ் படம் மூலமாக கதாநாயகன் ஆனார், துறுதுறுப்பான இளைஞராக அறிமுகமான சித்தார்த் தற்போது வரை அதே இளமையுடன் இருப்பது அவரது பலமாக அமைந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர், 2007ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ள சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் அதிதிராவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. 37 வயதான அதிதி ராவ் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.