மூளைச்சாவடைந்த நிலையில் 7 உயிர்களுக்கு வாழ்வளித்த பெண் சமையல் மாஸ்டரின் பாகங்கள்

 

ஒருவருக்கு உதவி செய்வது நல்லது, ஆனால் அப்படி செய்ய முடியவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பது மிகவும் நன்று என சொல்வதை கேட்டிருப்போம். இப்படியாக ஒரு பெண் தன்னை அறியாமல் மரணத்தில் இருக்கும் சூழலில், 7 உயிர்களுக்கு உதவி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதயம், சிறுநீரகம், கருவிழி, தோல், கல்லீரல், எலும்பு என 7 பேருக்கு வாழ்வளித்த பெண் சமையல் மாஸ்டரின் சாந்தி, ஆன்மா சாந்தியடைய உறவினர்கள் வேண்டிக் கொண்டனர்.

 



 

எதிர்பாராதவிதமாக பைக்கின் பின்னால் அமர்ந்த சாந்தி தவறி கீழே விழந்துள்ளார்


 

கோயம்பத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மனைவியான சாந்தி (49) கொங்குநாடு மருத்துவமனையில் சமையல் மாஸ்டராக பணி புரிந்தார். இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று கோயம்புத்தூரில் இருந்து தேனிக்கு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கணவனும் மனைவியும் பைக்கில் வந்துள்ளனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குய்யப்பன்நாயக்கன்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் கடந்துசென்றபோது எதிர்பாராதவிதமாக பைக்கின் பின்னால் அமர்ந்த சாந்தி தவறி கீழே விழந்துள்ளார். இதில் மயக்கமடைந்த நிலையில் இருந்தவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

விமானம் மூலமாக சென்னை சென்ற இதயம்

 

இந்நிலையில் சாந்திக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து சாந்தியின் இதயம் மற்றும் சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழிகள், தோல், எலும்பு என 7 உடலுறுப்புகளும் தானமாக வழங்கப்பட்டது. சாந்தியின் இதயம் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக காவல்துறையினரின் பாதுகாப்புடன் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. 

 



சாந்தியின் உடல் குடும்பத்தினரிடம் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டது.


 

இதேபோன்று சிறுநீரகங்கள் மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. கல்லீரல் வேலம்மாள் மருத்துவமனைக்கும், கருவிழி, எலும்பு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், தோல் கென்னட் மருத்துவமனையிலும் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த சாந்தியின் உடலுறுப்பு 7 பேருக்கு  வழங்கப்பட்டது, நெகிழ்ச்சி அளிப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 7 உடல் உறுப்புகளை தானாமாக வழங்கிய சாந்தியின் உடல் மருத்துவமனை முதல்வர் செல்வராணி தலைமையில் குடும்பத்தினரிடம் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டது.