Pager Blasts: அடுத்தடுத்து பேஜர்கள் வெடித்து 2,700-க்கும் அதிகமானோர் காயமடைந்தது தொடர்பான தாக்குதலை, இஸ்ரேல் நடத்தியதாக லெபனான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
லெபனானில் பரவலாக வெடித்த பேஜர்கள்:
லெபனானில் பல்வேறு பகுதிகளில் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படும், கையடக்க பேஜர்கள் திடீரென வெடித்து சிதறின. இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவின் போராளிகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட 2,750 பேர் காயமடைந்தனர். லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் குண்டுவெடிப்பில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம், மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறல் எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு:
பேஜர் குண்டுவெடிப்புக்கு இஸ்ரேல் மீது லெபனான் அரசு குற்றம் சாட்டி வருகிறது. லெபனானின் தகவல் அமைச்சரும் "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு" கண்டனம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்புகளுக்கு ஹெஸ்பொல்லா அமைப்பு முதலில் இஸ்ரேலைக் குற்றம் சாட்டவில்லை என்றாலும், பின்பு இஸ்ரேலிய ராணுவமே இந்த குற்றவியல் ஆக்கிரமிப்புக்கு முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளது. இஸ்ரேல் இந்த பாவமான ஆக்கிரமிப்புக்கு அதன் நியாயமான தண்டனையை நிச்சயமாக பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
வெடித்த பேஜர்கள் அண்மையில் ஹெஸ்புல்லா கொண்டு வந்த சமீபத்திய மாடல் என்று கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு நடந்த ஆரம்ப வெடிப்புகளுக்குப் பிறகு, பேஜர் வெடிப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது. லெபனான் முழுவதும், குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில், பல வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறின. பாதுகாப்பு ஆதாரங்களின்படி, லெபனானின் தெற்கிலும் சாதனங்கள் வெடித்தன. இருப்பினும், பேஜர்கள் எவ்வாறு வெடித்தது என்பது தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை. இந்த குண்டுவெடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிசிடிவி காட்சியில், ஒரு மளிகைக் கடையில் பணியாளரின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய கையடக்க சாதனம், வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது தானாக வெடித்தது.
கடந்த ஆண்டு காசா மோதல் வெடித்ததில் இருந்து, இஸ்ரேலும் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவும் சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமான எல்லை தாண்டிய போரில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.